டிரம்பின் பெயர் ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் உள்ளதாகக் கூறிய எக்ஸ் பதிவை எலான் மஸ்க் நீக்கியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் டிரம்பின் பெயர் உள்ளது என கூறிய எக்ஸ் பதிவை எலான் மஸ்க் திடீரென டெலிட் செய்துள்ளார். இதனால், டிரம்ப் - மஸ்க் இடையே நிலவிய மோதல் முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு, நிர்வாக ரீதியாகப் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அரசு நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் துறையின் தலைமை ஆலோசகராக டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியான தொழிலதிபர் எலான் மஸ்கை நியமித்தார்.

ஆட்குறைப்பு மற்றும் வரிச் சலுகை ரத்து

எலான் மஸ்கின் ஆலோசனைப்படி, அமெரிக்க அரசு பணிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அத்துடன், சர்வதேச அளவில் அமெரிக்க அரசு சார்பில் பல்வேறு திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வந்த நிதி உதவிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், அமெரிக்க செனட் அவையில் பொருளாதாரச் செலவினங்களை மாற்றியமைக்கும் வகையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதில் மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கான வரிச் சலுகைகளை ரத்து செய்யும் அம்சம் இடம்பெற்றிருந்தது. இதனால் அதிருப்தியடைந்த எலான் மஸ்க், டிரம்பின் இந்த மசோதாவை "அருவருப்பானது" என்று கடுமையாக விமர்சித்தார்.

"நான் இல்லையென்றால் டிரம்ப் ஜெயித்திருக்க முடியாது"

இந்த விவகாரத்தில் டிரம்புக்கும் எலான் மஸ்கிற்கும் இடையே கடுமையான வார்த்தை மோதல் வெடித்தது. இது தொடர்பாக எலான் மஸ்க் தனது 'எக்ஸ்' சமூக வலைத்தளப் பக்கத்தில், "நான் இல்லையென்றால் டிரம்பால் வெற்றி பெற்றிருக்க முடியாது. டிரம்ப் நன்றியுணர்வு அற்றவர்" என்று விமர்சித்தார்.

அத்துடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், துணை அதிபர் ஜே.டி.வான்சை அந்தப் பொறுப்பில் நியமிக்க வேண்டும் எனவும் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

எப்ஸ்டீன் விவகாரம்

இதற்கிடையில், பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் டிரம்பின் பெயர் உள்ளதால், அது இன்று வரை வெளியிடப்படாமல் உள்ளது என்று எலான் மஸ்க் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். அவரது இந்த குற்றச்சாட்டு அமெரிக்க அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதேசமயம், அரசின் செலவினங்களைக் குறைக்க எலான் மஸ்கின் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்கள், சலுகைகள் உள்ளிட்டவை நிறுத்தப்படும் என்று டிரம்ப் தரப்பில் பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து எலான் மஸ்க் தனது 'எக்ஸ்' தளத்தில், "புதிய கட்சியை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டதா?" என வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார். இதனால் எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்கப் போகிறாரா என்ற கேள்வி எழுந்தது.

எப்ஸ்டீன் பதிவு நீக்கம்

இந்த நிலையில், ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் டிரம்பின் பெயர் உள்ளதாகக் கூறி 'எக்ஸ்' தளத்தில் எலான் மஸ்க் வெளியிட்ட பதிவை தற்போது நீக்கியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையிலான வார்த்தை மோதல் முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக எலான் மஸ்கின் குற்றச்சாட்டு குறித்துப் பேசிய டிரம்ப், "எலான் மஸ்க் என்னை எதிர்ப்பது எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் அவர் இதை பல மாதங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருவரின் உறவும் தொடர்ந்து மாறிவரும் நிலையில், இந்த திடீர் பதிவு நீக்கம் முக்கியத்துவம் பெறுகிறது