அடுத்து நீ தான்.. அமெரிக்காவின் அடுத்த டார்கெட் இந்த நாடுகள் தான்.. பதறும் உலக தலைவர்கள்
வெனிசுலாவுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப் பல நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நகர்வுகள் உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்காவின் அடுத்த இலக்கு
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பிறகு, அமெரிக்காவின் அடுத்த நகர்வுகள் குறித்து உலக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி 2026க்கான தனது திட்டங்களை வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வெனிசுலாவைத் தொடர்ந்து ஈரான், மெக்ஸிகோ, கிரீன்லாந்து, கியூபா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா கடும் நிலைப்பாடு எடுக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
கிரீன்லாந்து காலக்கெடு
அந்த பட்டியலில் முதன்மையானதாக பேசப்படுவது கிரீன்லாந்து. கிரீன்லாந்து மீது அமெரிக்காவுக்கு ஆர்வம் இருப்பதை டிரம்ப் முன்பே வெளிப்படுத்தியிருந்தார். தற்போது, கிரீன்லாந்துக்கு 20-ம் தேதி காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “எந்த விலையை கொடுத்தாவது கிரீன்லாந்தை பிடிக்க வேண்டும்” என்ற டிரம்பின் கருத்துக்கள், நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை அதிகரிக்கக்கூடும் என கிரீன்லாந்து நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.
ஈரான் அமெரிக்க எச்சரிக்கை
இதற்கிடையில், ஈரான் மீதான அழுத்தமும் அதிகரித்து வருகிறது. கடந்த 2025 ஜூன் மாதத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, மீண்டும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாக்குதல் ஏற்பட்டால், ஈரான் உச்ச தலைவர் அலி காமெனெய் மாஸ்கோ செல்லலாம் என்ற தகவலும் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இதனால், ஈரான் தனது பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது.
வெனிசுலா அமெரிக்க நடவடிக்கை
வெனிசுலாவை பொறுத்தவரை, இரண்டாம் சுற்று நடவடிக்கைக்கான தயாரிப்புகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்திய பேட்டியில், டிரம்ப், வெனிசுலா அரசு ஒத்துழைக்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். மதுரோ கைது செய்யப்பட்ட பிறகு அமைக்கப்பட்ட புதிய அரசு, அமெரிக்க அழுத்தத்திற்கு உடன்பட மறுத்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்க விருப்பம் தெரிவித்துள்ளது.
கியூபா மிரட்டல்
இதோடு மட்டுமல்லாமல், கியூபா மீதும் டிரம்ப் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார். கியூபா படையினர் மதுரோவை பாதுகாத்ததாகவும், அந்த முயற்சியில் 32 கியூபா வீரர்கள் உயிரிழந்ததாகவும் கியூபா அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு பாரம்பரிய எதிரியாகக் கருதப்படும் கியூபாவில், மைகேல் டியாஸ்-கானல் தலைமையிலான அரசு உள்ளது. இவ்வாறு, ஜனவரி 2026ல் அமெரிக்காவின் நடவடிக்கைகள் உலக அரசியலை புதிய பதற்ற நிலைக்கு தள்ளக்கூடும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே நிலவுகிறது.

