- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சின்ன மருமகள் சீரியல் நடிகை திடீரென மாற்றம்... அதிரடியாக களமிறங்கிய புது நடிகை யார்?
சின்ன மருமகள் சீரியல் நடிகை திடீரென மாற்றம்... அதிரடியாக களமிறங்கிய புது நடிகை யார்?
விஜய் டிவியில் பிரைம் டைம் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஒருவர் திடீரென விலகி இருக்கிறார். அவருக்கு பதில் யார் நடிக்கப்போகிறார் என்பதை பார்க்கலாம்.

Actress Quit Chinna Marumagal Serial
விஜய் டிவியில் வெற்றிநடைபோட்டு வரும் சீரியல்களில் சின்ன மருமகள் தொடரும் ஒன்று. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியலில், ஆரம்பத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. அதன்பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதால், சின்ன மருமகள் சீரியலில் நேரம் மாற்றப்பட்டது. அதன்படி இந்த சீரியல் இரவு 7.30 மணிக்கு மாற்றப்பட்டது. இந்த நேர மாற்றத்துக்கு பின்னர் டிஆர்பியில் கடகடவென முன்னேறி டாப் 10க்குள் நுழைந்தது இந்த சீரியல்.
சின்ன மருமகள் சீரியல்
சின்ன மருமகள் சீரியலில் நவீன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்வேதா நடித்து வருகிறார். இந்த சீரியலை மனோஜ்குமார் இயக்கி வருகிறார். இந்த சீரியல் 400 எபிசோடுகளை கடந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. ஸ்கூல் படிக்கும்போதே பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்துகொண்ட நாயகியின் வலிகள் நிறைந்த பயணத்தை சொல்லும் தொடர் தான் சின்ன மருமகள். இந்த சீரியலில் தற்போது அதிரடி மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
விலகிய தாமரை
சின்ன மருமகள் சீரியலில் வசந்தி என்கிற கதாபாத்திரத்தில் பிக் பாஸ் தாமரை நடித்து வந்தார். சுமார் ஓராண்டுக்கு மேலாக அந்த சீரியலில் வசந்தியாகவே தாமரை வாழ்ந்து வந்தார் என்று தான் சொல்ல வேண்டும். எமோஷனல் சீனாக இருந்தாலும் சரி, நகைச்சுவைக் காட்சியாக இருந்தாலும் சரி அதில், திறம்பட நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்திருந்தார் தாமரை. அவர் தான் தற்போது சின்ன மருமகள் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.
தாமரைக்கு பதில் யார்?
தாமரை விலகலால் இனி வசந்தியாக யார் நடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதற்கு தற்போது விடையும் கிடைத்துள்ளது. அதன்படி நடிகை ரிஹானா தான் தாமரைக்கு பதிலாக வசந்தி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். தாமரையை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு நடித்து வசந்தியாக மக்கள் மனதில் ரிஹானா இடம்பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தாமரை விலகலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

