- Home
- Cinema
- தொலைக்காட்சி
- இலட்சியத்தை அடையத் துடிக்கும் பெண்ணின் கதை..! டாப் கியரில் ‘சின்ன மருமகள்’ தொடர்
இலட்சியத்தை அடையத் துடிக்கும் பெண்ணின் கதை..! டாப் கியரில் ‘சின்ன மருமகள்’ தொடர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சின்ன மருமகள்’ சீரியல் தொடர் தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் டிவி ‘சின்ன மருமகள்’ தொடர்
தமிழ் சின்னத்திரை உலகில் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற தொலைக்காட்சியாக விஜய் தொலைக்காட்சி விளங்கி வருகிறது. இந்த தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘சின்ன மருமகள்’ தொடர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 22 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சின்ன மருமகள்’ தொடரில் ஸ்வேதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நவீன்குமார் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த தொடரை மனோஜ் குமார் இயக்கி வருகிறார்.
இலட்சியத்தை அடையத் துடிக்கும் தமிழ்ச்செல்வி
ஒரு இறுக்கமான சமூகத்தில் வாழும் துடிப்பான இளம் பெண்ணான தமிழ்ச்செல்வி மருத்துவத்துறையில் சாதிக்க வேண்டும் என விரும்புகிறாள். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அவளுக்கு திருமணம் நடைபெறுகிறது. கிராமத்தின் செல்வாக்கு மிக்க தலைவரின் மகனான சேதுபதி உடன் திருமணத்தை முடிக்கிறாள். அந்த வீட்டில் இருக்கும் பலரும் தமிழ்ச்செல்வியின் கல்வியை கடும் கடுமையாக எதிர்க்கின்றனர். அவளுடைய லட்சியங்களை நசுக்கி சமையலறைக்குள் அவளை முடக்க நினைக்கின்றனர். அந்த குடும்பத்தின் கட்டுப்பாட்டுகளுக்கு சரணடைய தமிழ்ச்செல்வி மறுக்கிறாள்.
கணவனும் வேண்டாம், தகப்பனும் வேண்டாம் - தமிழ்ச்செல்வி முடிவு
தன்னை கட்டுப்படுத்தும் அடக்குமுறை விதிமுறைகளை எதிர்த்து தனக்கான பாதையை தமிழ்ச்செல்வி உருவாக்குகிறாள். இதுவே இந்த சீரியலில் மையக் கருவாக உள்ளது. தற்போது கதைப்படி தனது கணவர் குடும்பத்திடம் தான் கர்ப்பமாக இருப்பதாக பொய் சொல்கிறார். அந்த உண்மை தெரிய வர தமிழ்ச்செல்வி கணவர் வீட்டிற்கு விரட்டி அடிக்கப்படுகிறாள். தந்தையும் கடனாளியாக, குடித்து விட்டு ஊதாரியாக சுற்றி திரியும் நிலையில் தந்தை வீட்டையும் உதறித் தள்ளுகிறார். பின்னர் அவர் உண்மையில் கர்ப்பமாக இருப்பது தெரியவர அதை கணவர் சேது நம்ப மறுக்கிறார்.
டாப் கியரில் செல்லும் ‘சின்ன மருமகள்’ தொடர்
புகுந்த வீடு, பிறந்த வீடு, கணவன் என அனைத்தையும் உதறித் தள்ளும் தமிழ்ச்செல்வி, நான் தனியாகவே என்னுடைய மருத்துவராகும் கனவை அடைவேன் என்று சொல்லி சவால் விட்டு கிளம்புகிறாள். அனைவரையும் புறந்தள்ளிவிட்டு கிளம்பும் தமிழ்ச்செல்வி அனைத்து தடைகளையும் உடைப்பாளா? அவளுடைய மருத்துவக் கனவு என்ன ஆகும்? என்கிற பரபரப்பை சின்ன மருமகள் தொடர் ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரின் புதிய எபிசோடுகளை விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.