- Home
- Cinema
- தொலைக்காட்சி
- எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நிறுத்தப்படுகிறது - சன் டிவியின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நிறுத்தப்படுகிறது - சன் டிவியின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நிறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சன் டிவியின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Stopped
சன் டிவியில் திருச்செல்வம் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் தான் எதிர்நீச்சல். ஆணாதிக்கம் மிக்க குடும்பத்தில் சிக்கிக் கொண்ட நான்கு பெண்கள், தடைகளை மீறி சாதிப்பதை மையமாக வைத்து தான் இந்த சீரியல் கதைக்களம் நகர்ந்து வந்தது. இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்கிற வில்லன் கதாபாத்திரம் மிகவும் ஹைலைட்டான ஒன்று. அதில் முதன்முதலில் மாரிமுத்து நடித்து வந்தார். அவரின் காமெடி கலந்த நக்கல் பேச்சும், டயலாக் டெலிவரியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் குறுகிய காலத்தில் இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது.
ஹிட் அடித்த எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பியிலும் சக்கைப்போடு போட்டு வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு இந்த சீரியலுக்கு மிகப்பெரிய பேரிடியாக அமைந்தது மாரிமுத்துவின் மறைவு. அவர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானதால், எதிர்நீச்சல் சீரியலின் எதிர்காலமும் கேள்விக் குறி ஆனது. அவர் இடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்பதே அப்போது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. பலகட்ட தேடலுக்கு பின்னர் நடிகர் வேலராம மூர்த்தியை அந்த கேரக்டருக்கு பைனல் பண்ணி நடிக்க வைத்தார்கள். இருந்தாலும் மாரிமுத்து அளவுக்கு அவரால் அந்த கேரக்டரை கொடுக்க முடியவில்லை. இதனால் எதிர்நீச்சல் சீரியல் 2024-ம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
சொதப்பும் எதிர்நீச்சல் 2
இதன்பின்னர் கதைக்களத்தை மாற்றி, கடந்த 2024-ம் ஆண்டு இறுதியில் எதிர்நீச்சல் தொடர்கிறது என்கிற பெயரில் அதன் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது. முதல் பாகத்தில் ஜனனியாக நடித்த மதுமிதா விலகியதால் அவருக்கு பதில் பார்வதி அந்த ரோலில் நடித்து வருகிறார். ஓராண்டுக்கு மேல் ஆனாலும் எதிர்நீச்சல் முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தை இந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஏற்படுத்தவில்லை என்பதே பலரின் விமர்சனமாக இருந்து வருகிறது. ஒரே கான்செப்டில் சீரியலை நகர்த்தி வருவதால் ரசிகர்களும் சலிப்படைந்துள்ளனர்.
மவுசை இழக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது
கொலை, கடத்தல், தலைமறைவு இதனை தான் திருப்பி திருப்பி கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமின்றி பெண்களின் முன்னேற்றம் பற்றிய சீரியல் என சொல்லிக் கொண்டு, அவர்களை அடிமைப்படுத்துவதையே காட்டி வருவதால் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதன் மவுசை படிப்படியாக இழந்து வருகிறது. டிஆர்பியிலும் எதிர்நீச்சல் 2 சீரியல் தொடர்ந்து சரிவை சந்தித்த வண்ணம் உள்ளது. தற்போது அந்த சீரியல் நிறுத்தப்பட உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது மறு ஒளிபரப்பு நிறுத்தம்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பான பின்னர், அதன் மறு ஒளிபரப்பு தினசரி காலை 8.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதனை நிறுத்த சன் டிவி முடிவு செய்துள்ளதாம். வருகிற பிப்ரவரி 2-ந் தேதி திங்கட்கிழமையில் இருந்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் மறு ஒளிபரப்பு செய்யப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மறு ஒளிபரப்புக்கு மிக மோசமான டிஆர்பி ரேட்டிங் கிடைத்து வந்ததால் சன் டிவி இந்த முடிவை எடுத்துள்ளதாம். இதனால் இனி இரவு 9.30 மணிக்கு மட்டுமே எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

