சினிமாவில் ஹீரோவாக மாஸ் எண்ட்ரி கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம்...!
விஜய் டிவியின் பிரபல தொடரான 'சிறகடிக்க ஆசை'யில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் ஒருவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக களமிறங்க உள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Actor debut as hero in Tamil Movie
சந்தானம், சிவகார்த்திகேயன், யோகி பாபு உள்ளிட்ட பலர் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு சென்று வெற்றிகரமாக வலம் வந்த நிலையில், அந்த பாதையில் இப்போது சிறகடிக்க ஆசை நட்சத்திரமும் இணைந்துள்ளார். சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் தான் ஸ்ரீதேவா. இவரின் காமெடி கலந்த நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நன்கு படித்தும் முட்டாள் ஆக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் தான் ஸ்ரீதேவா நடித்து வருகிறார். இவரின் மனைவியாக நடிக்கும் ரோகிணி தான் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.
'OTP' படத்தின் நாயகன்
ஸ்ரீதேவா முதன்முறையாக நாயகனாக நடிக்கும் படத்திற்கு 'OTP' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் இந்த ஆண்டிலேயே திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானதை அடுத்து பலரும் ஸ்ரீதேவாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஸ்ரீதேவா சின்னத்திரையில் பல ஆண்டுகளாக நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் துணைப் பாத்திரங்களில் தொடங்கி, படிப்படியாக முன்னேறியவர், தற்போது அடுத்தகட்டமாக சினிமாவிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
ஸ்ரீதேவாவுக்கு திருப்புமுனை கொடுத்த சிறகடிக்க ஆசை
இதற்கு முன்பு 'சுப்பன்' உள்ளிட்ட சில படங்களில் சிறிய வேடங்களில் தோன்றியிருந்தாலும், அவை பெரிய வெற்றி பெறாததால் அவரது திறமை பரவலாக அறியப்படவில்லை. 'சிறகடிக்க ஆசை' தொடரில் மனோஜ் கதாபாத்திரம் தான் அவருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தும் அந்த பாத்திரத்தில் அவரின் நடிப்பு, மக்களிடையே அவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது.
குவியும் வாழ்த்து
இன்றைய காலகட்டத்தில் OTT தளங்கள், தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளி குறைந்து வருகிறது. திறமையான நடிகர்களுக்கு நேரடியாக முக்கிய வாய்ப்புகள் கிடைக்கின்றன. அந்த வகையில் சிறகடிக்க ஆசையில் இருந்து ஸ்ரீதேவா சினிமாவுக்கு சென்றுள்ளதால் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தொடரில் காட்டிய நேர்மையான நடிப்பை சினிமாவிலும் எதிர்பார்க்கிறோம் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் போல் ஸ்ரீதேவாவும் சினிமாவில் ஜொலிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

