- Home
- Cinema
- தொலைக்காட்சி
- முதன்முறையாக டிஆர்பி ரேஸில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்!
முதன்முறையாக டிஆர்பி ரேஸில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்!
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இதுவரை இல்லாத அளவு அதிகபட்ச டிஆர்பி ரேட்டிங்கை பெற்று சாதனை படைத்துள்ளது.

Ethirneechal Thodargiradhu TRP Rating
சன் டிவி சீரியல்கள் என்றாலே அதற்கு மக்கள் மத்தியில் எப்போதுமே மவுசு உண்டு. அந்த வகையில் சன் டிவியில் சக்கைப்போடு போட்ட பல வெற்றிகரமான சீரியல்களை இயக்கியவர் திருச்செல்வம். இவர் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு சன் டிவியில் தொடங்கப்பட்ட சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் நான்கு குடும்பப் பெண்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டது. இதில் மதுமிதா, ஹரிப்பிரியா, கனிகா, பிரியதர்ஷினி ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்திருந்தார். ஆரம்பத்தில் இருந்தே அமோக வரவேற்பை பெற்ற இந்த சீரியல், சோசியல் மீடியாவிலும் செம டிரெண்ட் ஆனது.
ஹிட்டான எதிர்நீச்சல் தொடர்
எதிர்நீச்சல் சீரியல் சோசியல் மீடியாவில் டிரெண்ட் ஆனதற்கு முக்கிய காரணம் மாரிமுத்து தான். அதில் அவர் பேசும் டயலாக்குகள் மீம் டெம்பிளேட்டுகளாகவும் மாறின. இதனால் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வந்த எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பியிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தியது. இந்த சீரியலின் முதுகெலும்பாக இருந்து வந்த நடிகர் மாரிமுத்து கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் மறைவு எதிர்நீச்சல் சீரியல் குழுவினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
புது கதைக்களம்
மாரிமுத்துவின் மறைவுக்கு பின்னர் ஆதி குணசேகரனாக நடிக்க வேல ராமமூர்த்தி கமிட் ஆனார். அவரின் வருகைக்கு பின் இந்த சீரியல் பெரியளவில் சோபிக்கவில்லை. மாரிமுத்து அளவுக்கு வேல ராமமூர்த்தியால் ஆதி குணசேகரன் கேரக்டருக்கு உயிர்கொடுக்க முடியவில்லை. இதனால் கதையையும் எப்படி நகர்த்துவது என தெரியாமல் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் புத்தம் புது கதைக்களத்துடன் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம், எதிர்நீச்சல் தொடர்கிறது என்கிற பெயரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் டிஆர்பி
எதிர்நீச்சல் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பு அதன் இரண்டாம் பாகத்திற்கு கிடைக்காமல் இருந்தது. இதனால் டிஆர்பி ரேஸிலும் இந்த சீரியல் முன்னேற முடியாமல் தவித்து வந்த நிலையில், கடந்த வாரம் முதல் தர்ஷன் - அன்பரசி திருமண எபிசோடை கையில் எடுத்தார் திருச்செல்வம். விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த திருமண எபிசோடில் பல்வேறு அதிரடி திருப்பங்களும் நிறைந்திருந்ததால், எதிர்நோச்சல் தொடர்கிறது சீரியலின் டிஆர்பி ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இந்த சீரியல் 27வது வாரத்தில் 8.36 டிஆர்பி புள்ளிகளை பெற்று அசத்தி உள்ளது. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தொடங்கியதில் இருந்து அது பெற்ற அதிகபட்ச டிஆர்பி ரேட்டிங் இது என்பது குறிப்பிடத்தக்கது.