- Home
- Cinema
- அதே டெயிலர்; அதே வாடகை! டிஆர்பி-க்காக எதிர்நீச்சல் 2 சீரியலில் பார்க்கப்படும் பட்டி டிங்கரிங் வேலை!
அதே டெயிலர்; அதே வாடகை! டிஆர்பி-க்காக எதிர்நீச்சல் 2 சீரியலில் பார்க்கப்படும் பட்டி டிங்கரிங் வேலை!
சன் டிவியில் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் 2 சீரியலில் டிஆர்பி-க்காக பார்க்கப்பட்டு வரும் பட்டி டிங்கரிங் வேலையை பற்றி காணலாம்.

Sun TV Ethirneechal 2 Serial
சன் டிவியில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியலை திருச்செல்வம் இயக்கினார். இந்த சீரியல் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. அதற்கு முக்கிய காரணம் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து தான். அவரின் கேரக்டரும், நடிப்பும் அந்த சீரியலுக்கு பக்கபலமாக இருந்தது. இதனால் டிஆர்பியிலும் நம்பர் 1 சீரியலாக எதிர்நீச்சல் இருந்தது. ஆனால் கடந்த 2023-ம் ஆண்டு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மாரிமுத்து மரணமடைந்ததால், எதிர்நீச்சல் சீரியல் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. அவர் இல்லாததால் அந்த சீரியலை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. அவருக்கு பதில் வேல ராமமூர்த்தி வந்தாலும் மாரிமுத்து அளவுக்கு அவரால் ஸ்கோர் செய்ய முடியவில்லை. இதனால் கடந்த ஆண்டு எதிர்நீச்சல் முதல் பாகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
எதிர்நீச்சல் 2 சீரியல்
சினிமாவை போல் சீரியலிலும் பார்ட் 2 எடுப்பது டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எதிர்நீச்சல் தொடரின் இரண்டாவது பாகம், எதிர்நீச்சல் தொடர்கிறது என்கிற பெயரில் தொடங்கப்பட்டது. ஒரு சில மாற்றங்களை தவிர அதே டீம் உடன் களமிறங்கிய திருச்செல்வம், முதல் பாகத்தை போல் இந்த இரண்டாம் பாகத்தையும் விறுவிறுப்பாக எடுத்து செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் பாகம் அளவுக்கு திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாததால், இரண்டாம் பாகம் டிஆர்பியில் சற்று அடிவாங்கியது. இதனால் முதல் பாகத்தில் பயன்படுத்திய ட்ரிக்கை இரண்டாம் பாகத்திலும் கையில் எடுத்துள்ளார் இயக்குனர் திருச்செல்வம்.
எதிர்நீச்சல் 2 சீரியலில் டிஆர்பி-க்காக நடக்கும் பட்டி டிங்கரிங் வேலை
எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்தில் மிகவும் ஹைலைட்டாக பேசப்பட்ட விஷயம் என்றால் அது ஆதிரையின் திருமணம். ஆதிரை வேறு ஒருவனை காதலிக்க அவளை வலுக்கட்டாயமாக கரிகாலனுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார் ஆதி குணசேகரன். இந்த திருமணத்திற்கு பின்னர் குடும்பத்திற்குள் பல பிரச்சனைகள் வெடிக்கும், அதைவைத்தே திரைக்கதையை நகர்த்தி சென்றிருந்தார் திருச்செல்வம். அதேபோல் இந்த ஆண்டும் டிஆர்பியை எகிற வைக்க ஒரு கல்யாண எபிசோடை கதைக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். கடந்த முறை ஆதிரை என்கிற பெண்ணை சுற்றி எடுக்கப்பட்ட கல்யாண எபிசோடை, இம்முறை சற்று பட்டி டிங்கரிங் பார்த்து தர்ஷன் என்கிற ஆண் கேரக்டரை மையமாக வைத்து எடுத்து வருகிறார்கள்.
தர்ஷன் யாரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார்?
ஆதி குணசேகரன் தன்னுடைய மகனான தர்ஷனுக்கு அன்புக்கரசி என்கிற பெண்ணோடு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். ஆனால் இந்த திருமணத்தின் மீது விருப்பம் இல்லாத தர்ஷன், தான் காதலிக்கும் பார்கவியை தான் திருமணம் செய்துகொள்வேன் என இருக்கிறார். இந்த சமயத்தில் பார்கவியின் குடும்பம் பிரச்சனையில் இருந்து தப்பிக்க கொடைக்கானல் சென்றுவிடுகின்றனர். தர்ஷனும் அங்கு வந்துவிட மீண்டும் பிரச்சனை ஆரம்பமாகிறது. பின்னர் தன்னுடைய மனைவி ஈஸ்வரியிடம் நல்லவன் போல நடித்து தர்ஷனை வீட்டுக்கு வரவைத்து விடுகிறார் குணசேகரன். அதேபோல் அடியாட்கள் வைத்து பார்கவி குடும்பத்தை தீர்த்துக்கட்ட பிளான் போடுகிறார் குணசேகரன். இதில் பார்கவியின் அப்பாவை கொன்றுவிடுகிறார்கள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்கிற விறுவிறுப்பான கதைக்களத்தில் எதிர்நீச்சல் 2 சீரியல் பயணிக்கிறது. கடந்த பாகத்தை போல் இந்த பாகத்திலும் அதே கதையை பட்டி டிங்கரிங் பார்த்து எதிர்நீச்சல் சீரியல் குழு பயன்படுத்தி வருவதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.