- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறைக்காக டிவியில் போட்டிபோட்டு ஒளிபரப்பாகும் புதுப்படங்கள் லிஸ்ட் இதோ
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறைக்காக டிவியில் போட்டிபோட்டு ஒளிபரப்பாகும் புதுப்படங்கள் லிஸ்ட் இதோ
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையை ஒட்டி சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான புதுப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம்.

Ayudha Pooja and Vijayadashami Special Movies
பண்டிகை காலம் என்றாலே புதுப்படங்களுக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறையை ஒட்டி தொடர்ந்து ஐந்து நாட்கள் லீவு வருவதால், தியேட்டர்களில் தனுஷ் நடித்த இட்லி கடை திரைப்படம் அக்டோபர் 1ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கு போட்டியாக அக்டோபர் 2ந் தேதி ரிஷப் ஷெட்டி இயக்கியுள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஆயுத பூஜை விடுமுறைக்கு தியேட்டர்களை போல் தொலைக்காட்சியிலும் போட்டி போட்டு புதுப் படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழில் என்னென்ன புதுப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன என்பதை பார்க்காலம்.
சன் டிவி
ஆயுத பூஜை சிறப்பு படங்கள்
சன் டிவியில் ஆயுத பூஜை ஸ்பெஷலாக வருகிற அக்டோபர் 1ந் தேதி காலை 11 மணிக்கு ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்த அயலான் படம் ஒளிபரப்பாக உள்ளது. அன்றைய தினம் மதியம் 3 மணிக்கு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா நடித்த வீரம் படம் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
விஜயதசமி சிறப்பு படங்கள்
அக்டோபர் 2-ந் தேதி விஜயதசமி அன்று சன் டிவியில் காலை 11 மணிக்கு ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடித்த ருத்ரன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. அன்று மதியம் 3 மணிக்கு விஷால், சுனைனா நடிப்பில் உருவான லத்தி திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது.
விஜய் டிவி
ஆயுத பூஜை ஸ்பெஷல் மூவீஸ்
விஜய் டிவியில் ஆயுத பூஜை விடுமுறையான அக்டோபர் 1ந் தேதி காலை 11.30 மணிக்கு அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் உருவான டிஎன்ஏ திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு சசிக்குமார், சிம்ரன் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
விஜயதசமி ஸ்பெஷல் மூவீஸ்
விஜயதசமி அன்று காலை 11 மணிக்கு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா, கயாடு லோகர் நடித்த டிராகன் படமும், அன்றூ மாலை 4.30 மணிக்கு கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்த பிரம்மாண்ட பட்ஜெட் படமான தக் லைஃப் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜீ தமிழ்
ஆயுத பூஜைக்கு ஒளிபரப்பாகும் படங்கள்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆயுத பூஜை பண்டிகையன்று அக்டோபர் 1ந் தேதி காலை 9.30 மணிக்கு சமுத்திரக்கனி நடித்த திரு மாணிக்கம் திரைப்படமும், அன்று காலை 11.30 மணிக்கு சந்தானம் நடித்த பேய் படமான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமும், மதியம் 2 மணிக்கு விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
விஜயதசமிக்கு ஒளிபரப்பாகும் படங்கள்
விஜய தசமி அன்று அக்டோபர் 2ந் தேதி காலை 9.30 மணிக்கு அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடித்த டிமாண்டி காலனி 2 திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. அன்றைய தினம் மதியம் 2 மணிக்கு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தர்ஷன் நடித்த ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.