- Home
- டெக்னாலஜி
- "சும்மா நம்பரை பிளாக் பண்ணா போதுமா?" ஸ்பேம் கால்களுக்கு டிராய் சொன்ன மாஸ் ஐடியா! இனி பயப்படாம போன் எடுக்கலாம்!
"சும்மா நம்பரை பிளாக் பண்ணா போதுமா?" ஸ்பேம் கால்களுக்கு டிராய் சொன்ன மாஸ் ஐடியா! இனி பயப்படாம போன் எடுக்கலாம்!
TRAI ஸ்பேம் கால்களைத் தடுக்க DND ஆப் பயன்படுத்துமாறு டிராய் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். மோசடி அழைப்புகளை நிரந்தரமாகத் தடுப்பது எப்படி? முழு விவரம்.

TRAI தொல்லை தரும் அழைப்புகளுக்கு முடிவு
மொபைல் போன் பயனர்களுக்குத் தேவையற்ற அழைப்புகள் (Spam Calls) மற்றும் மோசடி குறுஞ்செய்திகள் (Fraud Messages) பெரும் தலைவலியாக மாறியுள்ளன. இதைக் கட்டுப்படுத்த இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், வெறுமனே நம்பரை பிளாக் செய்வதால் மட்டும் ஸ்பேம் கால்களைத் தடுத்துவிட முடியாது என்றும், இதற்கு 'டிஎன்டி' (DND - Do Not Disturb) செயலியைப் பயன்படுத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் டிராய் தலைவர் அனில் குமார் லஹோட்டி தெரிவித்துள்ளார்.
டிஎன்டி (DND) செயலியின் அவசியம் என்ன?
டிராய் ஏற்பாடு செய்திருந்த பயிலரங்கம் ஒன்றில் பேசிய அனில் குமார் லஹோட்டி, இந்தியாவில் சுமார் 116 கோடி மொபைல் சந்தாதாரர்கள் இருப்பதாகவும், ஆனால் அவர்களில் வெறும் 28 கோடி பேர் மட்டுமே டிஎன்டி (DND) பதிவேட்டில் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். "உங்கள் போனில் வரும் ஸ்பேம் நம்பரை நீங்கள் பிளாக் செய்தால், அது உங்களுக்கு மட்டுமே வராது. ஆனால், அந்த மோசடி நபர் வேறு நம்பர்களுக்குத் தொடர்ந்து அழைப்பார். அதுவே நீங்கள் டிராய் டிஎன்டி (TRAI DND App) செயலியில் புகார் அளித்தால், அந்த குறிப்பிட்ட எண் கண்காணிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, நிரந்தரமாகத் துண்டிக்கப்படும்," என்று அவர் விளக்கினார்.
வங்கி அழைப்புகளுக்குப் புதிய '1600' சீரிஸ்
ஆன்லைன் நிதி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களைக் குறைக்கும் மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கெனத் தனி எண் வரிசையை டிராய் ஒதுக்கியுள்ளது. இதன்படி வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மற்றும் காப்பீ நிறுவனங்கள் இனி '1600' எனத் தொடங்கும் எண்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் உண்மையான வங்கி அழைப்புகளையும், போலி அழைப்புகளையும் எளிதாக வேறுபடுத்திப் பார்க்க முடியும்.
அரசு மற்றும் மாநிலங்களின் கவனம்
மத்திய தொலைத்தொடர்புத்துறை இணையமைச்சர் பெம்மாசானி சந்திர சேகர் வீடியோ மூலம் பேசுகையில், மக்களுக்குத் தரமான மற்றும் நம்பகமான தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம் என்றார். மேலும், ஒடிசா தலைமைச் செயலாளர் மனோஜ் அகுஜா பேசுகையில், புயல் மற்றும் சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் மக்களின் உயிரைக் காப்பதில் எவ்வளவு முக்கிய பங்காற்றுகின்றன என்பதை ஒடிசாவின் அனுபவங்கள் மூலம் எடுத்துரைத்தார்.
சஞ்சார் சாதி (Sanchar Saathi) கட்டாயமில்லை
இதற்கிடையில், ஸ்மார்ட்போன்களில் 'சஞ்சார் சாதி' செயலியை முன்கூட்டியே இன்ஸ்டால் செய்வது (Pre-installed) கட்டாயம் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. முன்னதாக மார்ச் 2026 முதல் அனைத்து புதிய போன்களிலும் இது கட்டாயமாக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், டிஜிட்டல் உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் தனியுரிமை கவலைகளைக் கருத்தில் கொண்டு, அந்த உத்தரவு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

