Satcom Launch செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் பற்றி எந்தப் பரிந்துரையும் நிலுவையில் இல்லை என TRAI மறுக்கிறது. இந்த மோதலால் ஸ்டார்லிங்க் போன்ற செயற்கைக்கோள் இணையச் சேவைகள் இந்தியாவில் தொடங்குவது தாமதமாகிறது.

இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய (Satellite Internet) சேவையைத் தொடங்குவது குறித்து மத்திய அரசுக்கும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI (டிராய்)-க்கும் இடையே ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது. செயற்கைக்கோள் தகவல் தொடர்பு ஸ்பெக்ட்ரம் (Spectrum) தொடர்பான எந்தப் பரிந்துரையும் தங்களிடம் நிலுவையில் இல்லை என்று டிராய் வெள்ளிக்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய ஸிந்தியா (Jyotiraditya Scindia), "சேவையைத் தொடங்குவதற்கு ஸ்பெக்ட்ரம் விலை குறித்த இறுதிப் பரிந்துரையை டிராய் இன்னும் அளிக்க வேண்டும்," என்று கூறியதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அமைச்சரின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்த டிராய்

"செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளுக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் விலை குறித்த பரிந்துரைகளை டிராய் ஏற்கனவே அளித்துவிட்டது. அதற்குப் பிறகு தொலைத்தொடர்புத் துறையிடம் (DoT) இருந்து எந்தக் குறிப்பும் (Reference) வரவில்லை," என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது அமைச்சரின் கூற்றை நேரடியாக முரண்படுகிறது. கடந்த மே மாதத்திலேயே தொலைத்தொடர்புத் துறைக்கு விரிவான பரிந்துரைகளை டிராய் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்கத் தாமதமாவதற்கான காரணம் எது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

டிராய் வழங்கிய முக்கியப் பரிந்துரைகள் என்ன?

டிராய் தனது மே மாதப் பரிந்துரையில், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் போன்ற செயற்கைக்கோள் சேவை வழங்குநர்கள் தங்களின் வருடாந்திர வருவாயில் (Adjusted Gross Revenue - AGR) 4% கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. மேலும், இந்த 4% ஏஜிஆர் ஸ்பெக்ட்ரம் கட்டணமானது GSO மற்றும் NGSO ஆபரேட்டர்கள் இருவருக்கும் பொருந்தும் என்றும், அத்துடன் ஒரு மெகா ஹெர்ட்ஸுக்கு (MHz) குறைந்தபட்ச ஆண்டு கட்டணமாக ₹3,500 வசூலிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது. நகர்ப்புறங்களில் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, ஒரு வாடிக்கையாளருக்கு ஆண்டுக்கு ₹500 கூடுதல் கட்டணத்தை டிராய் பரிந்துரைத்தது. எனினும், கிராமப்புறங்களில் சேவை வழங்குவதற்கு இந்தக் கூடுதல் கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டது.

ஸிந்தியா கூறிய தாமதத்திற்கான காரணம்

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய ஸிந்தியா, "இந்தியாவில் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகள் தொடங்க இரண்டு முக்கியக் காரணிகள் உள்ளன. அவை சேவை வழங்குநர்களின் ரோல்அவுட் திட்டங்கள் மற்றும் டிராயிடமிருந்து ஸ்பெக்ட்ரம் விலை குறித்த இறுதிப் பரிந்துரை ஆகியவையே," என்று இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC 2025) நிகழ்வில் பேசியிருந்தார். "ஸ்பெக்ட்ரம் விலையை டிராய் இன்னும் இறுதி செய்ய வேண்டும். அது நிலுவையில் உள்ள பகுதியாகும். அதை ஒழுங்குமுறை ஆணையம் செய்யும்," என்றும் அவர் தாமதத்திற்கான காரணத்தை விளக்கினார். ஆனால், டிராய் அதிகாரிகள் தங்கள் தரப்பில் எந்தப் பரிந்துரையும் நிலுவையில் இல்லை என்று கூறியிருப்பது, செயற்கைக்கோள் இணையச் சேவையை எதிர்பார்த்திருக்கும் பயனர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.