- Home
- டெக்னாலஜி
- சூரியன் மஞ்சள் இல்லையாம்... வெள்ளைதானாம்: பூமியில் நிறம் மாறுவது ஏன்? ஆச்சரியமூட்டும் அறிவியல்!
சூரியன் மஞ்சள் இல்லையாம்... வெள்ளைதானாம்: பூமியில் நிறம் மாறுவது ஏன்? ஆச்சரியமூட்டும் அறிவியல்!
சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது, காற்றில் உள்ள மூலக்கூறுகளால் குறைந்த அலைநீளமுடைய நீல நிறம் நாலாபுறமும் சிதறடிக்கப்படுகிறது. எஞ்சியிருக்கும் மஞ்சள், ஆரஞ்சு வண்ணங்களே சூரியன் மஞ்சளாகவும், பகல் நேர வானம் நீலமாகவும் காட்சியளிக்கிறது.

வானம் ஏன் நீலம்?... சூரியன் ஏன் மஞ்சள்?
குழந்தைகளின் சித்திரங்கள், பாடப்புத்தகங்கள் முதல் வானிலை வரைபடங்கள் வரை சூரியன் என்றாலே மஞ்சள், ஆரஞ்சு, தங்க நிறத்தில்தான் வரையப்படுகிறது. ஆனால், நமது சூரியக் குடும்பத்தின் மையப்புள்ளியாகத் திகழும் சூரியனை விண்வெளியில் இருந்து பார்த்தால், அதன் அசல் நிறம் தூய வெள்ளை என்பது பலருக்கும் ஆச்சரியமளிக்கும் உண்மை.
சூரியனின் இந்தத் தோற்ற மாறுபாட்டுக்குக் காரணம் சூரிய ஒளிக்கும் பூமியின் வளிமண்டலத்திற்கும் இடையே நடக்கும் ஒளிச் சிதறல்தான். அது எவ்வாறு நிகழ்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.
வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது?
வானம் நீல நிறமாக இருப்பதற்கும், சூரியன் மஞ்சள் நிறமாகத் தெரிவதற்கும் ஒரே அறிவியல் காரணம்தான். சூரிய ஒளி காற்று மண்டலத்திற்குள் நுழையும் போது சிதறடிக்கப்படும் நீல நிற ஒளி, வளிமண்டலம் முழுவதும் பரவுகிறது. நாம் சூரியனின் நேரடிப் பார்வையைத் தவிர்த்து வானத்தை அண்ணாந்து பார்க்கும்போது, எங்கும் பரவியுள்ள அந்த நீல ஒளியே நம் கண்களை அடைகிறது. இதனால் பகல் நேரவானம் நீலமாகத் தெரிகிறது. ஒருவேளை பூமிக்கு வளிமண்டலம் இல்லையென்றால், பகலிலும் வானம் விண்வெளியைப் போலக் காரிருளாகவே காட்சியளிக்கும்.
சூரியனின் நிஜ நிறம் என்ன?: வானவில் காட்டும் ரகசியம்
சூரியனை நாம் மஞ்சள் நட்சத்திரம் என்று அழைத்தாலும், அது உண்மையில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், ஊதா என காணுறு நிறமாலையில் உள்ள அனைத்து வண்ண அலைநீளங்களையும் சமமாக வெளியிடுகிறது. இந்த வண்ணங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து நம் கண்களை அடையும் போது, அது தூய வெள்ளை ஒளியாகத் தெரிகிறது.
கண்ணாடி முப்பட்டகம் (Prism) வழியே சூரிய ஒளியைச் செலுத்தும்போது அது வானவில்லாகப் பிரிவதே இதற்குச் சான்று. சூரியனின் வெளிப்பகுதியான ஒளிக்கோளத்தின் (Photosphere) வெப்பநிலை சுமார் 5,500°C ஆக உள்ளது. இது பரந்த மின்காந்தக் கதிர்வீச்சை வெளியிடுகிறது. இந்த அனைத்து வண்ண அலைநீளங்களும் இணைந்த கலவையே வெள்ளை ஒளி என்கிறது நாசா.
பூமியில் இருந்து பார்க்கும்போது சூரியன் மஞ்சளாகத் தெரிவது ஏன்?
சூரிய ஒளி விண்வெளியில் இருந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது, காற்றில் உள்ள நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை எதிர்கொள்கிறது. இந்த மூலக்கூறுகள் நீண்ட அலைநீளம் கொண்ட வண்ணங்களை விட, குறைந்த அலைநீளம் கொண்ட நீலம் மற்றும் ஊதா நிறங்களை மிகத் தீவிரமாக நாலாபுறமும் சிதறடிக்கின்றன. இதனால் சூரியனுக்கும் நம் கண்களுக்கும் இடைப்பட்ட நேரடிப் பாதையில் இருந்து நீல நிறம் விலகிவிடுகிறது. எஞ்சி இருக்கும் மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு கலந்த வெப்பமான வண்ணங்கள் மட்டுமே நம் கண்களை வந்தடைவதால், சூரியன் பூமிக்கு மஞ்சளாகக் காட்சியளிக்கிறது.
ஒளியானது அதன் அலைநீளத்தை விட மிகச்சிறிய துகள்கள் அல்லது மூலக்கூறுகளுடன் மோதும் போது ஏற்படும் விளைவே 'ரேலே சிதறல்' ஆகும். குறுகிய அலைநீளம் கொண்ட நீல நிறம் மிக எளிதாகச் சிதறும். நீண்ட அலைநீளம் கொண்ட சிவப்பு நிறம் எளிதில் சிதறாமல் நேராகப் பயணிக்கும். சூரியன் வானின் உச்சியில் இருக்கும்போது, ஒளி கடந்து வரும் வளிமண்டலப் பாதை குறைவு. அடிவானத்திற்கு செல்லும்போது, ஒளி மிக நீண்டதூரம் வளிமண்டலத்தை கடக்க வேண்டியிருப்பதால் சிதறலின் அளவு பல மடங்கு அதிகரிக்கிறது.
உதயத்திலும் மறைவிலும் சூரியன் ஆரஞ்சு, சிவப்பாக மாறுவது ஏன்?
சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன நேரங்களில் சூரியன் அடிவானத்திற்கு மிக அருகில் இருக்கும். இதனால், சூரிய ஒளி பார்வையாளரை அடைவதற்கு முன் வளிமண்டலத்தின் மிக நீண்ட தொலைவைக் கடக்க வேண்டியுள்ளது. அதிக தூரம் பயணிக்கும் போது, குறைந்த அலைநீளம் கொண்ட நீல ஒளி முழுமையாகச் சிதறி மறைந்துவிடுகிறது. அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்கள் மட்டுமே சிதறாமல் தப்பித்து நம் கண்களை நேரடியாக அடைகின்றன. இதன் காரணமாகவே வைகறையிலும், அந்தி மாலையிலும் சூரியனும் வானமும் கண்கவர் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களில் மிளிர்கின்றன.
மாசுபாடும் தூசியும் சூரியனின் நிறத்தை மாற்றுமா?
வளிமண்டலத்தில் கலந்திருக்கும் தூசு, புகை, ஏரோசால்கள் மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை சூரிய ஒளி சிதறும் விதத்தில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. காற்றின் தன்மை, ஈரப்பதம் மற்றும் இந்தத் துகள்களின் அடர்த்தியைப் பொறுத்து, சூரிய அஸ்தமனம் வழக்கத்தை விட மிக அடர்ந்த சிவப்பாகவோ, இளஞ்சிவப்பாகவோ அல்லது மங்கலான மூடுபனி போன்றோ காட்சியளிக்கும்.
வளிமண்டலம் இல்லாத விண்வெளியில் சூரியன் எப்படி இருக்கும்?
விண்வெளியில் ஒளியைச் சிதறடிக்க எந்த வளிமண்டலமும் காற்றும் இல்லை. எனவே, சூரியனின் அனைத்து வண்ண அலைநீளங்களும் தடையின்றிப் பயணிப்பதால், விண்வெளியில் இருந்து பார்க்கும்போது சூரியன் அசல் வெள்ளை நிறத்தில் மட்டுமே ஒளிரும். அதேபோல், சூரியனைச் சுற்றியுள்ள விண்வெளி நீலமாக இல்லாமல் முழுமையான கருப்பு நிறத்தில் அமைந்திருக்கும்.
சூரியன் உண்மையில் நிறத்தை மாற்றுவதில்லை; அது எப்போதும் வெள்ளை நிற விண்மீன்தான். ஆனால், அதன் ஒளி கடந்து வரும் பூமியின் வளிமண்டலக் காற்றுதான் அதை உச்சி வானில் மஞ்சளாகவும், அந்தி வானில் செவ்வானமாகவும் நம் கண்களுக்குக் காட்டுகிறது. அடுத்த முறை சூரியனையோ, நீல வானத்தையோ ரசிக்கும் போது, அது வளிமண்டலம் நிகழ்த்தும் வண்ண மாயாஜாலம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.
