- Home
- டெக்னாலஜி
- உருகும் பனிப்பாறைகள், நகரும் மையம்: பூமியின் சமநிலை மாறுகிறதா? நாசா ஆய்வில் வெளியான அதிர்ச்சி!
உருகும் பனிப்பாறைகள், நகரும் மையம்: பூமியின் சமநிலை மாறுகிறதா? நாசா ஆய்வில் வெளியான அதிர்ச்சி!
பூமி நிலையான திடமான கோளம்போல் காட்சியளித்தாலும், அதன் நிறை மையம் (Centre of mass) பருவநிலைகளுக்கு ஏற்ப தொடர்ந்து ஊசலாடிக்கொண்டிருக்கிறது என்பதை நாசா (NASA) ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பூமியின் மையம் தொடர்ந்து நகர்கிறதா? நாசா ஆய்வில் வெளியான ரகசியம்
பூமியை நாம் ஒரு நிலையான, திடமான பந்து போலப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்; ஆனால், உண்மை அதுவல்ல. பூமியின் நிறை மையம் (Centre of mass) ஒவ்வொரு நொடியும் ஓரிடத்தில் நிற்காமல் தொடர்ந்து ஊசலாடி கொண்டிருக்கிறது. பருவநிலைக்கு ஏற்ப தண்ணீர், பனிப் பாறைகள் மற்றும் காற்று போன்றவை கண்டங்களுக்கு இடையே இடம் மாறுவதால், பூமியின் வடிவியல் மையத்தில் இருந்து அதன் நிறை மையம் சில மில்லிமீட்டர்கள் அளவுக்கு அங்கும் இங்கும் நகர்கிறது.
இந்த நுண்ணிய மாற்றங்களை மில்லிமீட்டர் அளவுக்கு மிகத் துல்லியமாகக் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை நாசா (NASA) ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் (JPL) புவி அறிவியல் ஆய்வாளர் டொனால்ட் ஆர்கஸ் (Donald Argus) தலைமையிலான குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்த ஆய்வுக் கட்டுரை ஜியோபிசிகல் ஜர்னல் இன்டர்நேஷனல் (Geophysical Journal International) இதழில் வெளியாகியுள்ளது.
சில மில்லிமீட்டர் நகர்வு ஏன் இவ்வளவு முக்கியம்?
பூமியின் நிறை மையம் அல்லது 'ஜியோசென்டர்' (Geocentre) என்பது செயற்கைக்கோள் வழிசெலுத்தல் (Satellite Navigation), உலக வரைபடங்கள் மற்றும் கடல் மட்ட உயரத்தைக் கணிக்கும் முக்கிய அளவீட்டு முறைமைகளுக்கு (Reference systems) ஆதாரமாக விளங்குகிறது. அதிகத் துல்லியத்தன்மை தேவைப்படும் விண்வெளி மற்றும் பொறியியல் பணிகளில், இந்த சில மில்லிமீட்டர் பிழைகூடப் பெரிய குழப்பங்களை ஏற்படுத்திவிடும்.
2017 மற்றும் 2023-ல் சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட கணக்கீடுகளில் 7 மி.மீ வரை முரண்பாடுகள் இருந்த நிலையில், தற்போது நாசாவின் புதிய கணக்கீடு முந்தைய மதிப்பீடுகளைவிடப் பருவநிலை நகர்வு மிகக் குறைவானதே என்பதை நிரூபித்துள்ளது.
துல்லியத்தை எட்டிய நாசாவின் புது உத்தி
தரைவழி ஜிபிஎஸ் (GPS) கண்காணிப்புகளுடன் புவியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றும் பல்வேறு செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை தரவுகள் இணைக்கப்பட்டுள்ளன. பனி மற்றும் நீரின் பாரத்தால் பூமியின் மேலோடு (Earth’s crust) அடையும் வடிவ மாற்றங்களையும் கணக்கில் கொண்டு தரை நிலையங்களின் அளவீட்டுத் துல்லியம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஈர்ப்பு விசையால் இயல்பாகவே பூமியின் நிறை மையத்தைச் சுற்றிவரும் LAGEOS 1, LAGEOS 2 போன்ற லேசர் பிரதிபலிப்பு பட்டகங்கள் கொண்ட பிரத்யேக செயற்கைக்கோள்களும் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பூமியை அசைத்துப் பார்க்கும் பருவநிலை காரணிகள்!
பூமியின் மையம் நகர்வதற்குப் பெருங்கடல்கள், வளிமண்டலக் காற்று மற்றும் நிலப்பரப்பில் உள்ள நீர்நிலைகளே (பனி, ஏரி, ஆறு, நிலத்தடி நீர்) முக்கியக் காரணங்களாக உள்ளன. மார்ச் மாத பனிப்பொழிவு வட அமெரிக்கா மற்றும் யூரேசியாவில் குவியும் அதீத பனிப்பொழிவு, நிறை மையத்தை வட துருவத்தை நோக்கி சுமார் 3 மி.மீ தள்ளுகிறது. ஏப்ரலில் அமேசான் படுகையில் நீரின் இருப்பு சுமார் 2,400 ஜிகாடன்களைத் தொடும்போது, மையம் தென் அமெரிக்கா நோக்கி 2.2 மி.மீ நகர்கிறது.
ஆகஸ்ட் - அக்டோபரில் பனி உருகி கடலில் கலப்பது மற்றும் பருவமழையால் பசிபிக் பெருங்கடல் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அரேபியா, ஆசியா, வட ஆப்பிரிக்காவில் நிலவும் அடர்ந்த குளிர்காலக் காற்று டிசம்பரிலும், தென் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா காற்று ஜூன் மாதத்திலும் மையத்தை இடம்பெயரச் செய்கின்றன.
நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்த விநோதம்!
நகரும் நீரால் பூமியின் புவியீர்ப்பு புலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து வரும் நாசா மற்றும் ஜெர்மனியின் 'கிரேஸ்-எஃப்ஓ' (GRACE-FO) விண்கலத் தரவுகளோடு இந்த முடிவுகள் கச்சிதமாகப் பொருந்துகின்றன. மேலும், இந்தத் துல்லியப் பதிவுகளைத் தொடர நாசா தனது அடுத்தகட்ட 'கிரேஸ்-சி' (GRACE-C) திட்டத்தை 2028-ஆம் ஆண்டின் இறுதியில் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.
