- Home
- Tamil Nadu News
- 'ஓசியில் பயணிக்கும் உங்களுக்கு எதுக்கு சீட்?' சென்னை பஸ்ஸில் பெண்களிடம் வம்பிழுத்த இளைஞர்கள்!
'ஓசியில் பயணிக்கும் உங்களுக்கு எதுக்கு சீட்?' சென்னை பஸ்ஸில் பெண்களிடம் வம்பிழுத்த இளைஞர்கள்!
'ஓசியில் பயணிக்கும் உங்களுக்கு சீட் எதற்கு?' என்று கூறி சென்னை பஸ்ஸில் சில இளைஞர்கள் பெண்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

'ஓசியில் பயணிக்கும் உங்களுக்கு எதுக்கு சீட்?' சென்னை பஸ்ஸில் பெண்களிடம் வம்பிழுத்த இளைஞர்கள்!
சென்னை ஐய்யப்பன்தாங்கலில் இருந்து பிராட்வே நோக்கி நேற்று காலை வழக்கம்போல் அரசு பஸ் (தடம் எண் 26) ஒன்று சென்று கொண்டிருந்தது. வடபழனி அருகே சென்ற போது, ஏராளமான இளைஞர்கள் அந்த பஸ்ஸில் ஏறினார்கள். பஸ்ஸில் ஏறியதில் இருந்தே அந்த இளைஞர்கள் பெரும் கூச்சலிட்டபடி வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அத்துமீறிய அந்த இளைஞர்கள், பெண்கள் இருக்கையில் அமர்ந்திருந்த 5க்கும் மேற்பட்ட பெண்களை சத்தம்போட்டு எழுப்பிவிட்டு அந்த இருக்கையில் அமர்ந்துள்ளனர். இதை அந்த பெண்கள் தட்டிக்கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளைஞர்கள், ''நீங்கள் ஓசி டிக்கெட் தானே, டிக்கெட் எடுததுக் கொண்டா பயணம் செய்கிறீர்கள்? ஓசியில் பயணிக்கும் நீங்கள் சீட்டில் உட்கார்ந்து வருவீர்கள், காசு கொடுத்து டிக்கெட் எடுக்கும் நாங்கள் நின்று கொண்டு வர வேண்டுமா?'' என்று கேட்டுள்ளனர்.
பெண்களிடம் வம்பிழுத்த இளைஞர்கள்
மேலும் அந்த பெண்களை ஒருமையிலும், ஆபாசமாகவும் வசைபாடியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு பெண், ''ஓசி டிக்கெட் என சொல்வதெல்லாம் ரொம்ப தவறு. இது என்ன பேச்சு? நாங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் தானே உட்கார்ந்திருக்கிறோம். பிறகு ஏன் பிரச்ச்னை செய்கிறீர்கள்?'' என கேட்டுள்ளார்.
இதற்கு அந்த இளைஞர்களில் ஒருவர், அக்கா நீங்க பேசியதால் ரொம்ப பயந்துட்டோம் என்று கிண்டல் தொனியில் தெரிவித்ததுடன், நீங்க மட்டும் தான் வீடியோ எடுப்பீர்களா? நாங்களும் எடுப்போம் என்று கூறி மற்றொரு இளைஞரை வீடியோ எடுக்க சொல்கிறார்.
சென்னை அரசு பஸ்
தொடந்து அந்த இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கண்டக்டர் மற்றும் மற்ற பயணிகள் அவர்களை சமாதானம் செய்கின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அரசு பஸ்ஸில் பெண்களிடம் அத்துமீறிய இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு நகர பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம். ஆனால் அரசு நகர பஸ்களில் பெண்களை ''நீங்கள் ஓசியில் தானே பயணம் செய்கிறீர்கள்'' என்று சிலர் கிண்டல் செய்து வருவது தொடர்கதையாக இருக்கிறது. சென்னையில் நேற்று நடந்த இந்த சம்பவம் வீடியோ எடுக்கப்பட்டதால் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
ஆனால் தமிழ்நாடு முழுவதும் சில இடங்களில் 'ஓசியில் தானே பயணிக்கிறீகள்?' என்று பெண்கள் கிண்டல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா?
அரசு நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் என்பது அரசு கொண்டு வந்த திட்டம். அந்த திட்டத்தின்படியே பெண்கள் பயணம் செய்கின்றனர். இந்த கட்டணமில்லா பயண திட்டத்தின் மூலம் சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் வேலை பார்க்கும் பெண்கள், கல்லுரி மாணவிகளுக்கு டிக்கெட் செலவு மிச்சமாவதால் அவர்கள் அந்த பணத்தை சேமித்து வீட்டின் மற்ற செலவுகளுக்கு பயன்படுத்த முடிகிறது.
இப்படி ஒரு நல்ல திட்டத்தை பாராட்டவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் கொச்சைப்படுத்தி பேசுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே கட்டணமில்லா பயண திட்டத்தில் பயணிக்கும் பெண்கள் கிண்டலுக்கு உள்ளாவதை தடுக்கும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது கிண்டல் செய்யும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்பதே பெண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.