அதிமுகவுடன் கூட்டணி; பவன் கல்யாண் ரூட்டை பிடிக்கிறாரா விஜய்!!
திரை நட்சத்திரம் பவன் கல்யாண் ஆந்திராவில் துணை முதல்வராக வெற்றி பெற்றதைப் போல, நடிகர் விஜய் தமிழகத்தில் அரசியல் பிரவேசம் செய்துள்ளார். 2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, துணை முதல்வர் பதவி பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
vijay pawan kalyan
பவன்கல்யாண் அரசியல்
திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தென் மாநிலங்களில் அதிக அளவில் ஆட்சியை பிடித்துள்ளனர். அந்த வகையில் ஆந்திராவில் திரைத்துறையில் கலக்கி வந்தவர் பவன் கல்யாண், அரசியல் மீது இருந்த ஆர்வம் காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு பவன் கல்யாண் ஜனசேனா கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடதுசாரிகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து பவன் கல்யாண் களம் இறங்கினார். ஆந்திராவின் கஜுவாக்கா மற்றும் பீமாவரம் தொகுதிகளில் போட்டியிட்டவர் இரண்டு இடங்களிலும் தோல்வியடைந்தார்.
தெலுங்கு தேச கட்சியோடு கூட்டணி
அந்தத் தேர்தலில் ஜனசேனாவுக்கு 6 சதவீத வாக்குகளை பெற்றது. இதனையடுத்து தான் 2024ஆம் ஆண்டு தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் ஜனசேனாவும், தெலுங்கு தேசம் கட்சியும் இணைந்து போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டால் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான வாக்குகள் பிரிந்து மீண்டும் ஜெகன் ஆட்சிக்கு வரும் நிலை உருவாகும் என கணிக்கப்பட்டது.
இதனையடுத்து அரசுக்கு எதிரான வாக்குகளை பிரிக்க மாட்டேன் என பவன் கல்யாண் கூறினார். ஆந்திராவில் ஜனசேனாவும், தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. இதில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவை தொகுதிகளில் 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
TVK Leader Vijay
துணை முதல்வராக பவன் கல்யாண்
ஆந்திராவின் பிதாபுரம் தொகுதியில் ஜனசேனாவின் தலைவர் பவன் கல்யாண் 70,279 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது கட்சி சட்டப்பேரவை, மக்களவை என்று போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பவன் கல்யாண் பதவியேற்று அதிரடி அரசியல் செய்து வருகிறார்.
இதே போன்று தமிழகத்தில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியவர் வெற்றிகரமாக தனது முதல் அரசியல் மாநாட்டையும் நடத்தி முடித்துள்ளார். இந்த மாநாட்டில் பாஜக, திமுகவை நேரடியாக விமர்சனம் செய்தார்.
அதிமுகவோடு விஜய் கூட்டணியா.?
மேலும் 2025ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனி மெஜாரிட்டியோடு தவெக ஆட்சி அமையும் என தெரிவித்தார். இது மட்டுமில்லாமல் தங்களை தேடி கூட்டணி வருபவர்களுக்கு அமைச்சரவையிலும் இடம் வழங்கப்படும் என உறுதியாக கூறினார். மாநாட்டில் திமுக, பாஜகவை விமர்சித்தவர் அதிமுக தொடர்பாக எந்த கருத்தும் கூறவில்லை. எம்ஜிஆரை புகழ்ந்தும் பேசினார். எனவே அதிமுகவை ஒரு கட்சியாக விஜய் பொருட்படுத்த வில்லையா.?
அல்லது 2026ஆம் ஆண்டில் அதிமுகவுடன் கூட்டணிக்கு அச்சாராம் போடுகிறாரா என கேள்வி எழுந்துள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவோடு இணைந்து பவன் கல்யாண் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இதே போல தமிழகத்தில் மிகப்பெரிய பலம் வாய்ந்த ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுகவை வீழ்த்த அதிமுகவோடு விஜய் கூட்டணி வைத்தால் தான் முடியும் என கூறப்படுகிறது.
Vijay TVK
துணை முதல்வர் விஜய்.?
எனவே அதிமுகவின் பலம் மற்றும் தவெகவின் இளைஞர்களின் பலம் போன்ற சக்தி வாய்ந்த கூட்டணி அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை கூட்டணி வைத்து போட்டியிடும் பட்சத்தில் 2026ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக- தவெக கூட்டணி வெற்றி பெற்றால் அதிமுகவிற்கு முதலமைச்சர் பதவியும், விஜய்க்கும் துணை முதலமைச்சர் பதவியும் என ஒப்பந்தம் உருவாக வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் பேசி வருகின்றனர்.