- Home
- Tamil Nadu News
- நமக்குள்ள என்ன அண்ணே இருக்கு! ஓபிஎஸ்க்கு டக்குனு போன் போட்ட நயினார்! மனம் மாறும் OPS?
நமக்குள்ள என்ன அண்ணே இருக்கு! ஓபிஎஸ்க்கு டக்குனு போன் போட்ட நயினார்! மனம் மாறும் OPS?
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்ஸிடம் போனில் பேசிய நயினார் நாகேந்திரன் மீண்டும் கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். ஓபிஎஸ் மனம் மாறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Nainar Nagendran and OPS
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதிமுகவும், பாஜகவும் கூட்டணி வைத்துள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் நிலையில், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பிறகு ஓபிஎஸ்க்கு பாஜக போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமிக்காக பாஜக தன்னை அவமானப்படுத்துவதாக உணர்ந்த ஓபிஎஸ், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகினார். அரசியலில் எனக்கு என்று சுயமரியாதை உள்ளது என்று ஓபிஎஸ் தெரிவித்து இருந்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ''ஓபிஎஸ் என்ன காரணத்துக்காக விலகினார் என்பது தெரியவில்லை. என்னிடம் கேட்டிருந்தால் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் வாங்கி கொடுத்திருப்பேன். ஓபிஎஸ் என்னிடம் கேட்கவில்லை'' என்று கூறியிருந்தார்.
நயினார்-ஓபிஎஸ் மோதல்
இதற்கு பதில் அளித்திருந்த ஓபிஎஸ், ''பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக நான் பேசவில்லை என்று நயினார் நாகேந்திரன் சொல்வது பொய். நான் 6 முறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை'' என்று அதற்கான ஆதாரங்களை காட்டியிருந்தார். இப்படியாக நயினாருக்கும், ஓபிஎஸ்க்கும் வார்த்தை மோதல் வலுத்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரனும், நயினார் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி, பாஜக ஓபிஎஸ்க்கு இப்படி செய்திருக்கக் கூடாது என்று தெரிவித்து இருந்தார்.
ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்தும் பாஜக
இதற்கிடையே கூட்டணியில் இருந்து வெளியேறி இருந்தாலும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிப்பதாக ஓபிஎஸ் தெரிவித்து இருந்தார். இதனால் அவர் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்புகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் பாஜக தரப்பில் தன்னிடம் யாரும் பேசவில்லை என்று ஓபிஎஸ் தொடர்ந்து கூறி வந்தார். இந்நிலையில், ஓபிஎஸ்ஸிடம் போன் செய்து பேசியதாக நயினர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கசப்புகளை மறந்து விட்டு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும்படி அவர் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மனம் மாறுகிறாரா ஓபிஎஸ்?
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ''இப்போது தான் ஓபிஎஸ்ஸிடம் பேசினேன். திமுகவை வீழ்த்துவது தான் நம்முடைய ஒரே இலக்கு. திமுகவுக்கு எதிராக உள்ளவர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதற்காக தமிழக பாஜக தலைவர் என்ற முறையில் யாரிடமும் பேச தயாராக இருக்கிறேன்'' என்றார். ஏற்கெனவே டிடிவியும் விலகிய நிலையில், ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. இதனால் ஓபிஎஸ் மீண்டும் மனம்மாறி தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.