அவசரமாக ஒரு நபர் ஆணையம் அமைத்தது ஏன்? திமுக அரசிடம் கேள்விகளை அடுக்கிய விஜய்!
Vijay Grills Stalin on Karur Stampede One-Man Commission: கரூர் விவகாரத்தில் அவசரமாக ஒரு நபர் ஆணையம் அமைத்தது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை திமுக அரசுக்கு எதிராக தவெக தலைவர் விஜய் எழுப்பியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலினை விளாசிய விஜய்
கரூர் சம்பவத்துக்கு பிறகு தவெக பொதுக்குழு கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தின் முடிவில் பேசிய தவெக தலைவர் விஜய், கரூர் விவகாரத்தில் திமுக அரசு மீது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இது தொடர்பாக பேசிய விஜய், ''கரூர் விவகாரத்தில் பொய் மூட்டைகளால் நம்மை பற்றி அவதூறு பரப்புகிறார் முதல்வர் ஸ்டாலின். சட்டப்பேரவையில் முதல்வர் பேசியது வடிகட்ட பொய்.
தவெகக்கு எதிராக ஸ்டாலின் வன்மம்
நமக்கு எதிராக முதல்வர் எவ்வளவு வன்மத்தை கக்கியுள்ளார். ஆனால் இதெல்லாம் ஏன் நடந்தது? எதற்கு நடந்தது? என மக்கள் கேள்வி கேட்டதை முதல்வர் மறந்து விட்டாரா? இந்தியாவில் எந்த தலைவருக்கும் இல்லாத நிபந்தனை எனக்கு விதிக்கப்பட்டது. மக்களை பார்க்கக் கூடாது. எழுந்து நிற்க கூடாது. வேனை விட்டு வெளியில் வரக்கூடாது என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய விஜய்
ஆனால் கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விக்கு திமுக வழக்கறிஞர்கள் வாய்மூடி நின்றனர். உச்சநீதிமன்றம் திமுக அரசின் தலையில் கொட்டியது. கரூர் சம்பவம் நடந்த உடன் அவசரம் அவசரமாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? அதிகாரிகள் அவசரம் அவசரமாக செய்தியாளர்களை சந்தித்தது ஏன்? இந்த கேள்வியை நான் கேட்கவில்லை. திமுக அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டது. நம் மீதான அவதூறுகளை சட்டம், சத்தியத்தின் துணை கொண்டு துடைத்தெறிய போகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.