அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? வெளியான முக்கிய அப்டேட்
தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 9ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து வட மாவட்டம், தென் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் விடாமல் கனமழை வெளுத்து வாங்கியது இதனால் பெரும்பாலான ஏரி, குளங்கள் நீர் நிலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் தமிழகத்தில் மழை வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு செல்வதால் தற்போது டிசம்பர் மாதம் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் ஒருவித பீதியிலேயே இருந்து வருகின்றனர்.
சென்னை வானிலை மையம்
அதன்படி அடுத்த ஒருவாரத்திற்கு வானிலை எப்படி இருக்கும் என்ற அப்டேட்டை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதாவது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 09ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மிதமான மழை பெய்யக்கூடும்
அதேபோல் 10 முதல் 13ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
இன்று , நாளையும் வானிலை அப்டேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

