- Home
- Tamil Nadu News
- அடுத்த 3 மணிநேரம் உஷார்! டெல்டாவில் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை! வானிலை மையம் அலர்ட்!
அடுத்த 3 மணிநேரம் உஷார்! டெல்டாவில் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை! வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 9% கூடுதலாக பெய்துள்ள நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16ம் தேதி தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை விடாமல் வெளுத்து வாங்கியது. குறிப்பாக டெல்டா மற்றும் வட மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளில் மழை விடாமல் ஊத்தியதால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. நவம்பர் மாதத்தில் போதிய மழை பெய்யாத நிலையில் டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 9 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. இயல்பான காலகட்டத்தில் 383.2 மி.மீட்டர் மழை பெய்யும் நிலையில் இன்று வரை 417.3 மி.மீட்டர் பெய்துள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்திருந்தது.
இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது மதியம் ஒரு மணி வரை 7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

