Mettur Dam : மேட்டூர் அணை நீர் மட்டம் என்ன.? எத்தனை கன அடி நீர் வருகிறது.? வெளியேற்றப்படும் நீரின் அளவு என்ன.?
மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர் வரத்து வந்த நிலையில் தற்போது கிடு, கிடுவென குறைந்து 63ஆயிரம் கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது. இதனையடுத்து மேட்டூர் அணையில் இருந்து 23ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம்
டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக மேட்டூர் அணை உள்ளது. இந்த மேட்டூர் அணையில் தண்ணீர் இருந்தால் விவசாயம் செழிக்கும். அதே நேரத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டால் விவசாயமும் வறட்சியை சந்திக்கும். எனவே விவசாயிகளின் முக்கிய இதய பகுதியாக மேட்டூர் அணை உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உருவாகும் மேட்டூர் அணை பல மாவட்டங்களை கடந்து மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. பொங்கி வரும் காவிரியை அமைதிப்படுத்தி சேமித்து வைக்கும் பொக்கிஷமாக மேட்டூர் அணை உள்ளது.
கன மழையால் நிரம்பிய காவிரி
கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஒரு சில வாரங்களாக பெய்து வந்த கன மழையின் காரணமாக அங்குள்ள கேஆர்எஸ், கபினி உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக ஒரு லட்சத்து 60ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக அதிகரித்தது.
இந்தநிலையில் கர்நாடகாவில் தற்போது மழை சற்று குறைந்துள்ளதால் வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 60ஆயிரம் முதல் 70ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
மேட்டூர் அணை நீர் திறப்பு .?
இந்தநிலையில் மேட்டூர் அணையின் இன்றைய காலை நிலவரத்தை பொறுத்த வரை நீர்மட்டம் 118.84 அடியாக உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 70.267 கன அடியில் இருந்து 62.870 கன அடியாக குறைந்துள்ளது. இருந்த போதும் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 23ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வரும் நாட்களில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை பொறுத்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது குறைக்கப்படுமா அல்லது அதிகரிக்கப்படுமா என தெரியவரும்.