5 பேரை தாண்டி நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராவது எப்படி? பின்னணி காரணம் இதுதான்!
தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நாளை ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கான பின்னணி காரணம் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

Nainar Nagendran to be selected as Tamil Nadu BJP president: தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் மாற்றம் கொண்டு வர தேசிய தலைமை முடிவு செய்தது.
Nainar Nagendran, BJP
5 பேரை முறியடித்து முன்னேறிய நயினார் நாகேந்திரன்
அண்ணாமலையும், அதிமுகவும் பாம்பும் கீரியுமாக உள்ள நிலையில், கூட்டணி பேச்சுக்கு பாதகம் வந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட உள்ளார். இன்று அவர் பாஜக மாநில தலைவர் பொறுப்புக்கான விருப்ப மனு தாக்கல் செய்துள்ள நிலையில், போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அடுத்த தமிழக பாஜக தலைவருக்கான ரேஸில் தமிழிசை சௌந்தரராஜன், ஆனந்தன் அய்யாசாமி, வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், சரத்குமார் ஆகியோரும் இருந்த நிலையில், இவர்கள் அனைவரையும் தாண்டி நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக தேர்வாக இருப்பது எப்படி? என உங்களுக்கு கேள்விகள் எழலாம். நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை அதிமுகவில் நீண்ட காலம் இருந்தவர்.
அதிமுக டூ பாஜக.! மாநில தலைவராகும் நயினார் நாகேந்திரன்- யார் இவர்.?
Nainar Nagendran, ADMK
அதிமுகவில் இருந்த நயினார் நாகேந்திரன்
2001-2006 வரை அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராகவும், தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கடந்த 2017ம் ஆண்டு இவர் பாஜகவில் இணைந்தார். பாஜக கூட்டணியில் சேர வேண்டுமானால் அண்ணாமலை மாநில தலைவராக நீடிக்கக் கூடாது என அதிமுக நிபந்தனை வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவுடன் இணக்கமாக இருக்கும் ஒருவரை பாஜக தலைவர் பொறுப்பில் அமர்த்த தேசிய தலைமை திட்டமிட்டது. அதற்கு சரியான நபர் நயினார் நாகேந்திரன் என தேசிய தலைமை நினைத்துள்ளது.
நாகரீக அரசியலில் ஈடுபடுவார்
ஏனெனில் அதிமுகவில் இருந்த நயினார் நாகேந்திரனுக்கு அந்த கட்சியின் அனைத்து தலைவர்களுடனும் நல்ல பழக்கம் உள்ளது. அனைவரிடத்திலும் இனிமையாக பழகும் குணம் கொண்ட நயினார் நாகேந்திரன் அதிரடி அரசியலை ஈடுபடக் கூடியவர் அல்ல. எதிர்க்கட்சி தலைவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ய மாட்டார்; நாகரீக அரசியலில் ஈடுபடுவார் என்பதில் பாஜக தேசிய தலைமை நயினார் நாகேந்திரனை டிக் செய்துள்ளது.
Nainar Nagendran, Tamilnadu
இது தான் முக்கிய காரணம்
நயினார் நாகேந்திரன் தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளது. இது தவிர நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராவதற்கு வேறு முக்கிய காரணம் ஒன்று உள்ளது. பாஜகவை பொறுத்தவரை கொங்கு மண்டலத்தில், கன்னியாகுமரியில் பலமாக இருந்தாலும் மற்ற தென் மாவட்டங்களில் அந்த அளவுக்கு பலம் இல்லை.
குறிப்பாக தென் மாவட்டங்களில் கணிசமாக இருக்கும் தேவர், நாடார் சமுதாய வாக்குகள் பாஜகவுக்கு அதிகம் இல்லை. இதனால் அந்த வாக்குகளை குறி வைத்து தென் மாவட்டங்களில் பாஜகவை வலுவாக்கும் வகையிலும் நயினார் நாகேந்திரனுக்கு பொறுப்பு அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன் என அதிமுக பிரிந்து கிடப்பதால் தேவர் சமுதாய வாக்குகள் பிரிந்து திமுகவுக்கு அதிகம் செல்கிறது.
Tamilnadu Politics
தென்மாவட்டங்களில் செல்வாக்கு
இந்த வாக்குகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து பாஜகவுக்கு வரும் வகையில் அதே சமுதாயத்தை சேர்ந்த நயினார் நாகேந்திரனின் தேர்வு அமைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நயினார் நாகேந்திரன் தென்மாவட்டங்களில் மிகவும் செல்வாக்கு பெற்ற தலைவர். எந்த ஒரு விஷேச வீடு, தூக்க வீடு இருந்தாலும் சரி, கோயில் விஷேங்கள் இருந்தாலும் சரி அங்கு சென்று மக்களோடு மக்களாக நிற்பதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார்.
பாஜகவை வலுவாக காலூன்ற செய்வாரா?
தென்மாவட்ட மக்களுக்கு மிகவும் பரீச்சயமான தலைவர் என்பதால் மக்கள் மனதில் பாஜகவை அழுத்தமாக விதைக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு நயினார் நாகேந்திரனுக்கு பெரிய பொறுப்பு தேடி வந்துள்ளது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக உள்ள நயினார் நாகேந்திரன் பாஜக தலைமை நினைத்தபடி தமிழ்நாட்டில் பாஜகவை வலுவாக காலூன்ற செய்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நம்பி தமிழகம் வந்த அமித்ஷா.! ஏமாற்றிய இபிஎஸ், ராமதாஸ்- நடந்தது என்ன.?