- Home
- Tamil Nadu News
- இருமல் டானிக் சாப்பிட்டு கொத்து கொத்தாக குழந்தைகள் ப*.! நடந்தது என்ன.? தமிழக சுகாதாரத்துறை விளக்கம்
இருமல் டானிக் சாப்பிட்டு கொத்து கொத்தாக குழந்தைகள் ப*.! நடந்தது என்ன.? தமிழக சுகாதாரத்துறை விளக்கம்
Goldriff Cough Tonic : கோல்ட்ரிஃப் இருமல் டானிக் குடித்த குழந்தைகள் உயிரிழந்தனர். தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த சிரப்பில் டைஎதிலீன் கிளைகால் என்ற நச்சுப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டு அதன் உரிமையாளர் கைது.

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் டானிக் சாப்பிட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் மட்டும் நேற்றுவரை 20 குழந்தைகள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து இருமல் டானிக் கோல்ட்ரிஃப் சிரப் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு வந்த கோல்ட்ரிஃப் சிரப் நிறுவனத்தில் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி அன்று (1.10.2025) பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், மத்தியப் பிரதேச மாநில மருந்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறைக்கு ஒரு கடிதம் பெறப்பட்டது.
அக்கடிதத்தில், 4.9.2025 முதல் மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் மரணத்துக்கு தொடர்புடையதாக கருதப்படும் மருந்து, கோல்ட்ரிஃப் சிரப் (பாராசிட்டமால், ஃபீனைல்ஃப்ரைன் ஹைட்ரோகுளோரைடு, குளோரிபெனிரமைன் மெலேட் சிரப்). குறித்த விவரம் பெறப்பட்டது.
இது தொடர்பாக, அன்றைய தினமே (01-10-2025) சுமார் 4.00 மணியளவில், துணை மருந்து கட்டுப்பாடு இயக்குனரின் உத்தரவின் பேரில், முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் (Senior Drugs Inspector) தலைமையிலான குழு, M/s. ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் 01-10-2025 அன்றே தமிழ்நாடு முழுவதும் சந்தேகத்திற்குரிய கோல்ட்ரிஃப் சிரப் (Coldrif Syrup) விற்பனை மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டது.
அக்குழு (01-10-2025 to 02-10-2025) மேற்கொண்ட தொடர் ஆய்வில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, சர்ச்சைக்குரிய மருந்தான கோல்ட்ரிஃப் சிரப் உள்ளிட்ட 5 மருந்துகள் அவசர பகுப்பாய்வுக்காக எடுக்கப்பட்டு அரசு மருந்துகள் பகுப்பாய்வு கூடம், சென்னைக்கு அனுப்பப்பட்டது. பகுப்பாய்வின் முடிவில் டைஎதிலீன் கிளைகால் என்ற உயிர்க்கொல்லி நச்சு வேதிப்பொருள், கோல்ட்ரிஃப் சிரப்பில் (Coldrif Syrup) 48.6 சதவீதம் (48.6% w/v) இருப்பதாக 02-10-2025 அன்று கண்டறியப்பட்டது.
மேலும், மேற்கூறிய நிறுவனத்திலிருந்து, ஒடிசா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு கோல்ட்ரிப் மருந்து விநியோகிக்கப்பட்ட தகவல் கிடைக்கப்பட்ட விபரம் பெறப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இதுதொடர்பான தகவல்கள். 2-10-2025 அன்றே மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. இந்த சளி மருந்தில் டைஎதிலீன் கிளைகால் என்ற நச்சு வேதிப்பொருள் கண்டறியப்பட்டதால், 03-10-2025 அன்றே. ஸ்ரீசன் பார்மசியூட்டிகள், நிறுவனத்திற்கு பொதுநலன் கருதி மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்நிறுவனம் அதிகாரிகளால் உடனடியாக மூடப்பட்டது.
மேலும் தொடர் நடவடிக்கையாக ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து உரிமங்கள் முழுவதுமாக ஏன் ரத்து செய்யப்படக்கூடாது (Cancellation) என விளக்கம் கேட்டு 03.10.2025 அன்றே குறிப்பாணையும் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல் உயிர் இழப்பு 04.09.2025 அன்று ஏற்பட்ட நிலையில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடுத் துறைக்கு 01.10.2025 அன்றே தகவல் அனுப்பப்பட்டது. இவ்வாறு, தகவல் பெறப்பட்ட 48 மணிநேரத்தில் தமிழ்நாடு அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அம்மருந்து நிறுவனத்தில் புலனாய்வு மேற்கொண்டு,
சர்ச்சைக்குரிய மருந்தை ஆய்வுக்குட்படுத்தி, தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள மருந்துகளையும், தமிழ்நாட்டில் விற்பனையில் உள்ள மருந்துகளையும் தடைச்செய்து, அம்மருந்தில் விஷத்தன்மையுள்ள வேதிப்பொருள் டைதிலீன் கிளைகால் (DEG) இருப்பதை கண்டறிந்து, அந்நிறுவனத்தின் மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்தி மூடப்பட்டு, அந்நிறுவனத்தின் உரிமங்களை முழுமையாக ரத்து மேல்நடவடிக்கையாக செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டும். இம்மருந்து விநியோகம் செய்யப்பட்ட மாநிலங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவல்கள் அனைத்தும் மத்தியப் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும் உடனடியாக 03.10.2025 அன்று மின்னஞ்சல் மூலமாக மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. மேலும், 03.10.2025 அன்றே Drugs Controller General of India (DCGI) Deputy Drug Controller, South Zone, Chennai அவர்களுக்கும் விரிவான அறிக்கை மற்றும் அந்நிறுவனத்தில் உற்பத்தி நிறுத்திய ஆணை அனுப்பப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக coldrif syrup என்ற மருந்தின் ஆய்வு அறிக்கையில் கண்டறியப்பட்ட diethylene glycol 48.6 % நச்சு பொருள் இருந்ததன் காரணமாக அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்ற நடவடிக்கை (criminal proceedings) எடுத்து அந்நிறுவன உரிமையாளர் தலைமறைவானதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்காக குற்ற குறிப்பாணை (show cause memo)
07.10.2025 அன்று மருந்து ஆய்வாளர் மூலம் அந்நிறுவனத்தின் வெளிபுறமும், உரிமையாளரின் வீட்டின் கதவில் ஒட்டப்பட்டது. காவல் நிலையத்தில் மருந்து மேலும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்றவியல் (CRIMINAL) நடவடிக்கை மேற்கொள்ள C-2 சுங்குவார்சத்திரம் கட்டுப்பாட்டு துறை மூலம் புகார் கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு காவல் துறையின் உதவியுடன் மத்திய பிரதேச சிறப்பு புலனாய்வு பிரிவு (Special Investigation Team) இன்று (09-10-2025) அதிகாலை சென்னை அசோக் நகர் பகுதியில் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.ரங்கநாதன், (வயது 75) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அந்நிறுவனத்தில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ஆய்வு முறையாக மேற்கொள்ளப்பட்டு இந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டில், உரிய ஆய்வு மேற்கொள்ளாத காஞ்சிபுரம் முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் இருவர் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டு,
துறை ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது விரிவான ஆய்வு மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.