- Home
- Tamil Nadu News
- எனது பிறந்த நாளில் என்னை நேரில் சந்திக்க வராதீங்க! எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்பு! என்ன காரணம்?
எனது பிறந்த நாளில் என்னை நேரில் சந்திக்க வராதீங்க! எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்பு! என்ன காரணம்?
பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இருநாட்டு எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு நிச்சயமாக இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை எதிர்கொள்ளவும் இந்தியாவும் தயாராக இருந்தது. இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் திடீரென இந்திய எல்லைப்பகுதிகளில் தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே உச்சப்பட்ட போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ராணுவ படைகளுக்கு வாழ்த்துகள்
இந்நிலையில் எனது பிறந்த நாளில் என்னை நேரில் சந்திப்பதையும், கொண்டாட்டங்களில் ஈடுபடுவதையும் தவிர்த்திடுங்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடத்திய பிறகு, இந்தியாவின் பல நகரங்களை தாக்க பாகிஸ்தான் முற்பட்ட நிலையில், அதனை முறியடித்து நம் நாட்டு மக்களை காத்து வரும் மேன்மைமிகு ராணுவப் படைகளுக்கு எனது வாழ்த்துகள். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது.
என்னை நேரில் சந்திப்பதை தவிர்த்திடுங்கள்
இச்சூழலில், எதிர் வரும் எனது பிறந்தநாளை முன்னிட்டு என் உயிருக்கு உயிரான அன்பு கழக உடன்பிறப்புகள் யாரும் என்னை நேரில் சந்திப்பதையும், எந்த விதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அதே சமயம், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த எளியோர்க்கான இரத்த தானங்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட சமூக நலச் செயற்பாட்டு நிகழ்வுகளை மட்டும் மேற்கொண்டிட அறிவுறுத்துகிறேன்.
ராணுவ வீரர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்
நமக்காக எல்லையில் போர் புரியும் நம் இராணுவ வீரர்கள் , நலமுடன் இருக்கவும், வெற்றி பெற்றிடவும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தளங்களில், இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.