வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளர் அதிமுகவில்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இபிஎஸ்..!
AIADMK: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த நிலையில், அவரது தீவிர ஆதரவாளரான வினுபாலன் மீண்டும் அதிமுகவில் இணைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐவர் குழுவில் இருந்து வந்தவர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். இந்நிலையில் ஒற்றை தலைமை விவகாரத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஐயப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டதை அடுத்து அவர்களது ஆதரவாளர்கள் பலரும் கட்சியை விட்டு வெளியேறினர். பின்னர் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் செயல்பட்டு வந்தனர்.
வைத்தியலிங்கத்தின் தீவிர ஆதரவாளர்
இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் செயல்பட்டு வந்த வைத்தியலிங்கத்தின் தீவிர ஆதரவாளரான வினுபாலன் கட்சி கொள்கை குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதன் காரணமாக கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
அதிமுக ஐக்கியம்
இந்நிலையில், ஓபிஎஸ் அணியில் இருந்து திடீரென விலகிய வைத்திலிங்கம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மேலும் அவரது ஆதரவாளர்களும் திமுக இணைந்து வந்தனர். வைத்தியலிங்கத்தின் தீவிர ஆதரவாளரான வினுபாலனும் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் காமராஜ், ஒரத்தநாடு சேகர் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
முன்னாள் மாவட்ட கவுன்சிலர்
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வினுபாலன். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மாவட்ட கவுன்சிலராக இருந்தவர். அதிமுகவில் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

