குரூப்-4 தேர்வர்கள்! நாள் குறித்த டிஎன்பிஎஸ்சி! வெளியானது முக்கிய அறிவிப்பு!
TNPSC குரூப் 4 தேர்வுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

கடந்த 2025ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை மாதம் 12ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு மொத்தம் 13,89,738 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 11,48,019 பேர் தேர்வை எழுதினர். மீதமுள்ள 2,41,719 தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதவில்லை. முதலில் 3,935 காலி பணியிடங்கள் நிரப்படும் என கூறிய நிலையில் 727 கூடுதலாக சேர்த்து 4,662ஆக அதிகரிக்கப்பட்டது. இதன் முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி வெளியானது. இந்நிலையில் குரூப்-4 பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்-4 தேர்வு முடிவுகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி வெளியிடப்பட்டன. முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வின் முடிவில் உள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிறபதவிகள் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் பிப்ரவரி 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த கலந்தாய்வு சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில் சென்னை-600 003-ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேற்குறிப்பிட்ட இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான (www.tnpsc.gov.in)-லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். இரண்டாம் கட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

