- Home
- Tamil Nadu News
- அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டேன்.. தீய சக்தி; ஊழல் சக்தி வர விடமாட்டேன்.. விஜய் சூளுரை!
அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டேன்.. தீய சக்தி; ஊழல் சக்தி வர விடமாட்டேன்.. விஜய் சூளுரை!
அரசியலுக்கு வந்த பிறகும் சரி, நாளை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகும் சரி. பழைய ஆட்களைப் போலவோ அல்லது இப்போது இருப்பவர்களைப் போலவோ ஊழல் செய்ய மாட்டேன். என் மீது ஒரு துளி ஊழல் கூட படியாது என்று விஜய் தெரிவித்துள்ளார்.

தவெக கூட்டத்தில் அனல்பறக்க பேசிய விஜய்
தவெக செயல்வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று (ஜனவரி 25) நடந்தது. இந்த கூட்டத்தில் அனல்பறக்க பேசிய தவெக தலைவர் விஜய், எந்த வித அழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்தார்.
இது குறித்து பேசிய விஜய், ''எத்தனை அழுத்தங்கள் என் மீது திணிக்கப்பட்டாலும் எதற்கும் அடங்கிப்போகவோ, யாருக்கும் அடிமையாகவோ, எவரையும் அண்டிப் பிழைக்கவோ நான் அரசியலுக்கு வரவில்லை. எந்த அழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டேன்'' என்று தெரிவித்தார்.
உழைப்பு எங்கள் இரத்தத்தில் ஊறியது
தொடர்ந்து பேசிய விஜய், ''புதிய கட்சி என்று எங்களை எள்ளி நகையாடுவது ஒன்றும் எங்களுக்குப் புதிதல்ல. கடந்த 30 ஆண்டுகளாகவே எங்களை குறைத்து மதிப்பிடுவதுதான் பலரின் வழக்கமாக இருக்கிறது. ஆனால், எங்களை நம்பியவர்களுக்காக உழைப்பது என்பது எங்களின் இரத்தத்தில் ஊறிய குணம்.
என் மீது ஒரு துளி ஊழல் கூட படியாது
அரசியலுக்கு வந்த பிறகும் சரி, நாளை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகும் சரி... பழைய ஆட்களைப் போலவோ அல்லது இப்போது இருப்பவர்களைப் போலவோ ஊழல் செய்ய மாட்டேன். பொதுப்பணத்தில் ஒரு பைசாவைக் கூட தொடமாட்டேன்; அதற்கு எனக்கு அவசியமும் இல்லை. என் மீது ஒரு துளி ஊழல் கூட படியாது. படியவும் விடமாட்டேன். தீய சக்தி; ஊழல் சக்தி ஆட்சிக்கு வரக்கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.

