சிபிஐ முன்பு இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார் விஜய்..!
கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இரண்டாவது முறையாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.

கரூர் சிபிஐ விசாரணை
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசார கூட்டத்தின் போது விஜய்யை பார்ப்பதற்காக கட்டுக்கடங்காத கூட்டம் கூடிய நிலையில், அப்போது உருவான கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூத்த நிர்வாகிகளிடம் 3 நாள் விசாரணை
கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளான நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா, ஆனந்த் உள்ளிட்டோரிடம் சுமார் 3 நாட்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் விஜய் பயன்படுத்திய பிரசார வாகனமும் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடமும் அசம்பாவிதம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டது.
இன்று மீண்டும் ஆஜர்
இந்த நிலையில் கட்சியின் தலைவரான விஜய்யை சிபிஐ அதிகாரிகள் கடந்த 12ம் தேதி நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். சுமார் 7 மணி நேரம் நடத்தப்பட்ட விசாணையில் அவரிடம் பல முக்கிய கேள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அதில் பெறப்பட்ட பதில்கள் எழுத்துப் பூர்வமாகவும், வீடியோ வடிவிலும் பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு விஜய் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே அவரிடம் விசாரணை நிறைவு பெறாத நிலையில் இன்று மீண்டும் நேரில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் படி ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

