- Home
- Tamil Nadu News
- விஜய்யின் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு..! அடுத்து மக்களை எப்போது சந்திப்பார்? முழு விவரம்!
விஜய்யின் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு..! அடுத்து மக்களை எப்போது சந்திப்பார்? முழு விவரம்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து விஜய்யின் மக்கள் சந்திப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விஜய் அடுத்து மக்களை எப்போது சந்திப்பார்? என்பது குறித்து பார்ப்போம்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமைதோறும் மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த வாரம் அவர் கரூரில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், விஜய்யின் சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தவெக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய்யின் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு
இது தொடர்பாக தவெக தலைமை நிலையச் செயலகம் வெளியிட்ட அறிவிப்பில், ''கழகத் தோழர்களுக்கு வணக்கம்.நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.
புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு
விஜய் அடுத்த 2 வாரங்களில் வேலூர், ராணிப்பேட்டை, புதுச்சேரி மற்றும் கடலூரில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அதற்குள் சோக சம்பவம் நடந்தேறி விட்டதால் விஜய்யின் சுற்றுப்பயணம் இப்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக தவெக குறித்த அறிவிப்புகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தான் வெளியிடுவார். ஆனால் கரூர் சம்பவத்தை தொடர்ந்து அவர் தலைமறைவாகியுள்ளார். இதனால் தவெக தலைமை கழக நிலையம் என்ற பெயரில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விஜய்யின் உருக்கமான வீடியோ
இந்த வழக்கில் 2வது குற்றவாளியாக உள்ள புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் சம்பவம் தொடர்பாக உருக்கமான வீடியோ வெளியிட்ட விஜய், இது தாங்க முடியாத வலியை தந்துள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் இந்த வலிகளை கடந்து வலிமையுடன் திரும்பி வருவோம் என்றும் அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.