விஜயை புகழ்ந்து தள்ளிய காளியம்மாள்! தவெகவில் இணைய திட்டமா? அவரே சொன்ன பதில்!
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள், விஜய்யின் தவெகவில் இணையப் போவதாக வந்த தகவலை மறுத்துள்ளார்.

சீமான் - காளியம்மாள் மோதல்
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் அணிப் பாசறை ஒருங்கிணைப்பாளர்களும், ஸ்டார் பேச்சாளருமான இருந்து வந்தவர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த காளியம்மாள். இந்நிலையில் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து, காளியம்மாள் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அதை காளியம்மாள் திட்டவட்டமாக மறுத்தார். எந்த கட்சிக்கு செல்வது? குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
காளியம்மாள்
இதுபோன்ற சூழலில் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், சமூக செயற்பாட்டாளருமான காளியம்மாள்: ஒவ்வொரு முறையும் தேர்தல் குறித்து வியூகம் செய்ய முடியும். குறிப்பிட்ட கட்சிகள் தான் இருந்தது. அதனால் யோசித்து சொல்ல முடியும். ஆனால் இப்ப இருக்கும் அரசியல் சூழலில் அனுமானித்து சொல்ல முடியாத சூழல்தான் உள்ளது. மக்களும் பெரியளவில் பாதிக்கப்பட்ட சூழலில் தான் இருக்கிறார்கள். எனவே எப்பொழுது என்ன முடிவு எடுக்கப் போகின்றார்கள் என்று தெரியவில்லை.
விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு
கூட்டணியும் இன்னும் முழுமையாக முடியவில்லை. மக்களும் நிறைய பிரச்சினை உள்வாங்கி இருப்பதால் அந்த சூழலை கணிக்க முடியவில்லை. நான் அரசியல் விமர்சகரும் இல்லை. விஜயின் வருகை இளைஞர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இளைஞர்கள் - பெண்கள் மத்தியில் அதிக செல்வாக்குகள் உள்ளன. அதை மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்தால் இன்னும் பெரிய அளவில் மக்களை ஈர்க்க முடியும்.
கட்சி இணைவது குறித்து முறைப்படி அறிவிப்பேன்
என்னுடைய நிலைப்பாடு மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்கக்கூடியது. மக்கள் பிரச்னை தீர்க்கக்கூடிய ஆட்களா நான் இருப்பேன். நான் ஒரு கட்சியில் இணைவதாக இருந்தால் அதை முறைப்படி அறிவிப்பேன். அப்படி இணையும்போது எதற்காக அந்த கட்சியில் இணைய போகிறேன் என்பது குறித்து முழு விவரதையும் தெரிவித்து தான் இணைவேன் என அவர் தெரிவித்தார்.