உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி வருமோ? பதற்றத்தில் எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லுமா இல்லையா என்பது இன்று தெரியவரும்.

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல் சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவின் வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். இந்நிலையில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்ககூடாது என்று சூரியமூர்த்தி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து பிறப்பித்த உத்தரவை நீதிபதி திரும்ப பெற்றுக்கொண்டார்.
இவ்வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி நடைபெற்றது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது. இதனால் நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி வருமோ என்ற பதற்றத்தில் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.