- Home
- Tamil Nadu News
- விஜய் மீது கை வைக்க கூடாது.. ஸ்டாலினுக்கு ஆர்டர் போட்ட ராகுல்..! உண்மையை போட்டு உடைத்த வேல்முருகன்
விஜய் மீது கை வைக்க கூடாது.. ஸ்டாலினுக்கு ஆர்டர் போட்ட ராகுல்..! உண்மையை போட்டு உடைத்த வேல்முருகன்
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என முதல்வருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியதாக கூறி வேல்முருகன் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

விஜய் மீது வழக்கு பதியாதது ஏன்?
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய்யை பார்ப்பதற்காகவே மக்கள் கூடினர். விஜய் வந்ததால் தான் அசம்பாவிதம் நடைபெற்றது. அப்படி இருக்கையில் கட்சியின் தலைவரான விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாமல் கட்சியின் பொதுச் செயலாளர், இணை பொதுச் செயலாளர், மாவட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்வதை எப்படி ஏற்க முடியும்?
விஜய் கைது செய்யப்பட வேண்டும்
தனியார் கட்டுமானப்பணியின் போது விபத்து ஏற்பட்டால் கட்டிடத்தின் உரிமையாளர், ஒப்பந்ததாரர் கைது செய்யப்படுகிறார். இதே போன்று ஆந்திராவில் அண்மையில் சினிமா படப்பிடிப்பு பணியின்போது ஏற்பட்ட விபத்தில், அந்த படத்தின் கதாநாயகன் கைது செய்யப்பட்டுள்ளார். இவற்றை பார்க்கும் பொழுது தவெக தலைவர் விஜய்யும் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் விஜய் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை கைது செய்ய முடியாத சூழலை பாஜக ஏற்படுத்தி உள்ளதாக அறிகிறேன்.
ஸ்டாலினுக்கு கண்டிஷன் போட்ட ராகுல்..?
கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்தபடி முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டதாகவும், அதன் காரணமாகவே விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டிய கடமை முதல்வருக்கு உள்ளது.
விஜய்யை வாழ வைத்த ரசிகர்களின் வீடுகளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் விஜய் வீட்டில் எப்பொழுதும் போல ஆயுதபூஜை கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன. விஜய் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட வேண்டும்” என்று வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.