- Home
- Tamil Nadu News
- இனி வங்கியில் நகைகளை அடகு வைக்க 9 புதிய விதிமுறைகள்.! ஆர்பிஐக்கு எதிராக களத்தில் இறங்கிய அரசியல் கட்சிகள்
இனி வங்கியில் நகைகளை அடகு வைக்க 9 புதிய விதிமுறைகள்.! ஆர்பிஐக்கு எதிராக களத்தில் இறங்கிய அரசியல் கட்சிகள்
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய 9 நகைக்கடன் விதிகளால் ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துள்ளது. வரும் 31ம் தேதி சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளனர்.

வங்கியில் நகைகளை அடகு வைக்க சிக்கல்
ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் நம்பி இருப்பது வங்கி நகைக்கடனை மட்டுமே, அவசர தேவைக்கு நகைகளை அடகு வைத்து பணத்தை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் புதிதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போது ஆர்பிஐ அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆர்பிஐ 9 புதிய விதிமுறைகள்
இந்திய ஒன்றிய முழுவதும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களும், விவசாயிகளும் வங்கிகளில் தங்களின் தேவைகளுக்காக நகையை அடமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர். குறிப்பாக, விவசாயிகள் சாகுபடிக்காக நகையை அடகு வைத்து பயிர்க்கடன் பெற்று வருகின்றனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு சமீபத்தில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நகைக்கடன் பெறுவதற்கு புதிதாக 9 விதிகளை அறிவித்திருந்தது.அதில், அடமானம் வைக்கப்படும் நகை மதிப்பில் 75 விழுக்காடு மட்டுமே கடன் வழங்கப்படும். 22 காரட் அல்லது அதற்கு மேல் தரம் உள்ள நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.
நகைக்கடன்- விவசாயிகள் பாதிப்பு
நகையை மீட்பதற்கான முழுத்தொகையையும் வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டும். வட்டியை மட்டும் கட்டி, கடனை புதுப்பித்துக் கொள்ளும் முறை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, விவசாயிகள் வங்கிகளில் 4 விழுக்காட்டில் நகை கடன் பெற்று வந்த நிலையில், அந்த திட்டத்தையும் ரத்து செய்துவிட்டு, தற்போது சராசரியாக 9.75 விழுக்காட்டில் நகைக்கடனுக்கு வட்டி வசூலிக்கப்படுகிறது.
இந்த ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவால், விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, எழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை, கந்துவட்டிக்காரர்களிடமும், நகை கடன் வழங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தள்ளுகிற பேராபத்தை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி முற்றுகை போராட்டம்
எனவே, நகைக்கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய உத்தரவுகளை ரத்து செய்யக்கோரியும், அனைத்து தங்க நகைகளையும் அடமானம் வைப்பதற்கும், வட்டியை மட்டும் கட்டி நகைக் கடனை புதுப்பித்துக் கொள்ளும் முறையை அமல்படுத்தக் கோரியும்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரும் 31ம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை பாரீஸில் உள்ள இந்தியன் ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பு மாபெரும் முற்றுகை போராட்டத்தை முன்னெடுக்கிறது.
எனவே, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கும் இந்த அறவழிப் போராட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். அதேபோன்று, ஜனநாயக அமைப்புகள், அரசியல் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அழைப்பு விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

