- Home
- Tamil Nadu News
- பொதுமக்கள் எதிர்பார்த்த நாள் வந்தாச்சு.! வீடு தேடி வரும் 46 திட்டங்களுக்கான தீர்வு- அசத்தும் தமிழக அரசு
பொதுமக்கள் எதிர்பார்த்த நாள் வந்தாச்சு.! வீடு தேடி வரும் 46 திட்டங்களுக்கான தீர்வு- அசத்தும் தமிழக அரசு
தமிழக அரசு 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 10,000 சிறப்பு முகாம்கள் மூலம் 46 அரசுத் திட்டங்களுக்கான சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும்.

தமிழக அரசின் திட்டங்கள்
தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களுக்கு பல்வேறு ஆவணங்கள் தேவையாக உள்ளது. இதற்காக பல நாட்கள் அந்த அந்த பகுதிகளில் உள்ள அரசு அலுவலங்களுக்கு நாள் தோறும் அலையும் நிலை உள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரே முகாமில் 46 திட்டங்களுக்கு தீர்வு கானும் வகையில் தமிழக அரசு அசத்தலான திட்டத்தை தொடங்கியுள்ளது.
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் என்பது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட சூப்பரான மக்கள் நலத் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் அரசு அலுவலகங்களை மக்கள் தேடி செல்லாமல், அரசு சேவைகளை மக்களின் இல்லம் தேடி வந்து வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசு திட்டங்கள் மற்றும் சேவைகள் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்வது இதன் பிரதான இலக்காகும்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூலை 15, 2025) முதல் அக்டோபர் அல்லது நவம்பர் 2025 வரை 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நகர்ப்புறங்களில் 13 துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும், கிராமப்புறங்களில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். இந்த திட்டம் தொடர்பாக தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பப் படிவங்கள் மற்றும் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தை இன்று (ஜூலை 15, 2025) சிதம்பரத்தில் தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்த தொடர்பாக வருவாய் துறை செயலாளர் அமுதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உங்களுடன் ஸ்டாலின் இந்தத் திட்டமானது, முதல்வரின் முகவரித் துறை வழியே செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் துறை பொதுத் துறையின் கீழ் இயங்குகிறது.
ஒரே முகாமில் 46 திட்டங்களுக்கு தீர்வு
முதல்வர் தனது பயணத்தின் போது பெறப்பட்ட மனுக்கள், முதல்வரின் குறைதீர் பிரிவு, 1100 என்ற எண்ணில் செயல்படும் அழைப்பு மையம் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காணவே முதல்வரின் முகவரி துறை உருவாக்கப்பட்டது. இந்தத் துறையின் மூலமாக, 1.05 கோடி மனுக்கள் பெறப்பட்டன. ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி, 1.01 கோடி மனுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன.
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் இருந்து பெறப்பட்ட கருத்துகள், ஆலோசனைகள் அடிப்படையில், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு என்ற நிலையில் தற்போது அது 45 நாட்களில் தீர்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மனுக்கள் குறித்து மேல்முறையீடு செய்யலாம். மனுதாரர்கள் தங்களின் மனுக்களது நிலைமையை உங்களுடன் ஸ்டாலின் இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். இதற்கான பிரத்யேக இணையதளத்தை சிதம்பரத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
10ஆயிரம் முகாம்கள் நடத்தும் தமிழக அரசு
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நகரப் பகுதிகளஇல் 3,738 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடத்தப்பட உள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு இடங்களில் நாள்தோறும் ஆறு முகாம்கள் நடத்தப்படும். செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரத்துக்கு நான்கு நாள்கள் முகாம்கள் நடத்தப்படும்.
இவற்றுக்கு வரக்கூடிய மக்களுக்காக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. எந்தெந்த நாள்களில் எந்தெந்த இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன என்கிற விவரங்கள் முதல்வர் துவங்கி வைக்கவுள்ள பிரத்யேக இணையதளத்தில் தெரிவிக்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கவும் முகாம்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
ஒவ்வொரு முகாமிலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக 4 கவுன்டர்களும், துறை வாரியான சேவைகளைப் பெற 13 கவுன்டர்களும், இ-சேவை மற்றும் ஆதார் அட்டையில் மாற்றங்களைச் செய்வதற்கான சேவைகளை வழங்க தலா 2 கவுன்டர்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இணைய சேவை மையங்களில் வழங்கப்படும் சேவைகள் ஒவ்வொன்றுக்கும் 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முகாம்களுக்கு வருவோரிடம் இ-சேவை மையங்களின் சேவையைப் பெறுவதற்கான கட்டணம் பாதியாக மட்டுமே அதாவது 30 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என்று பெ.அமுதா தெரிவித்தார்.