- Home
- Tamil Nadu News
- பல கால்களைப் பிடித்த பழனிசாமி.. இப்ப மோடி காலில் டோட்டல் சரண்டர்! கிழித்து தொங்க விட்ட உதயநிதி!
பல கால்களைப் பிடித்த பழனிசாமி.. இப்ப மோடி காலில் டோட்டல் சரண்டர்! கிழித்து தொங்க விட்ட உதயநிதி!
ஸ்ரீரங்கத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பல தலைவர்களின் கால்களைப் பிடித்து பதவிக்கு வந்ததாக விமர்சித்தார். மேலும், ஆளுநர் ஆர்.என். ரவியுடன் தமிழ்நாடு தொடர்ந்து போராடி வெல்லும் என்று பதிலடி கொடுத்தார்.

பழனிசாமியை இறங்கி அடித்த உதயநிதி
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.
பல கால்களைப் பார்த்த பழனிசாமி!
"நன்றி காட்டுவதற்காக நான்கு தலைவர்களின் காலைப் பிடித்து, மாறி மாறிப் போன ஒரே ஆள் எடப்பாடி பழனிசாமிதான்," என்று விமர்சித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை கடுமையாகச் சாடினார்.
“எடப்பாடி பழனிசாமி முதலில் ஜெயலலிதாவின் காலைப் பிடித்தார். அவர் இறந்த பிறகு, சசிகலாவின் காலைப் பிடித்தார். பின்னர், அவரை சிறைக்கு அனுப்பிவிட்டு, டி.டி.வி. தினகரனின் காலைப் பிடித்தார். அதன் பிறகு, சிறிது காலம் மோடியின் காலையும் அமித் ஷாவின் காலையும் பிடித்தார். தற்போது, முழுமையாக மோடியின் காலில் சரணடைந்துவிட்டார்.”
ஆளுநர் ரவியுடன் போராடும் தமிழ்நாடு
அண்மையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேர்தல் பிரசார பாணியில் பேசியதற்கும் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். "சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் ரவியும், தனது தேர்தல் பரப்புரையை தொடங்கி, 'தமிழ்நாடு யாருடன் போராடப் போகிறது?' எனக் கேட்டுள்ளார். நான்கரை ஆண்டுகளாக ஆளுநருடன் தமிழ்நாடு போராடிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து போராடி வென்று காட்டுவோம்," என்று ஆளுநருக்குப் பதிலடி கொடுத்தார்.
திண்டுக்கல்லில் உதயநிதி ஆய்வு
திருச்சி நிகழ்ச்சியைத் தொடர்ந்து திண்டுக்கல் சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அங்கு மாவட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அரசுத் திட்டங்களின் செயலாக்கம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "முதலமைச்சர் ஆணைக்கிணங்க எல்லா மாவட்டங்களுக்கும் சென்று, அங்கே இருக்கக்கூடிய மாவட்ட அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன், திட்டப்படியான பணிகள் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை ஆய்வு செய்தோம்," என்று தெரிவித்தார். அரசின் திட்டங்கள் மக்களிடம் சரியான முறையில் சென்று சேர்வதை உறுதி செய்வதே இந்த ஆய்வின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.