- Home
- Tamil Nadu News
- சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்.. நாளை என்ன நடக்கும்? டெல்லி போலீசிடம் உதவி கேட்ட தவெக!
சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்.. நாளை என்ன நடக்கும்? டெல்லி போலீசிடம் உதவி கேட்ட தவெக!
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் நாளை (ஜனவரி 12) சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக விஜய்க்கு கடந்த 6ம் தேதி சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.

கரூர் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை
கரூரில் நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை முடிவடைந்த நிலையில், கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடமும் விசாரணை நடந்தது.
புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் விசாரணை
சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி. நிர்மல்குமார் ஆகியோர் ஆஜரானார்கள். இரண்டு நாட்கள் காலை முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் 3 பேரிடமும் பல்வேறு கிடுக்குப்பிடி கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர்.
நாளை ஆஜராகிறார் விஜய்
கூட்டத்திற்கு விஜய் எத்தனை மணி நேரம் தாமதமாக வந்தார்? தாமதத்திற்கு என்ன காரணம்?காவல்துறையிடம் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்று அனுமதி கோரப்பட்டது? ஆனால் உண்மையில் திரண்ட கூட்டம் எவ்வளவு? என பல்வேறு கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டது.
இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் நாளை (ஜனவரி 12) அதிகாரிகள் சிபிஐ விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக விஜய்க்கு கடந்த 6ம் தேதி சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.
டெல்லி போலீசிடம் உதவி கேட்ட தவெக
விசாரணைக்காக நாளை காலை 11 மணிக்கு விஜய் சிபிஐ முன்பு ஆஜராவார் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக நாளை அதிகாலையில் டெல்லி புறப்பட்டு செல்வார் என கூறப்பட்டுள்ளது.
டெல்லி வரும் விஜய்க்கு உரிய பாதுகாப்பு கொடுக்கும்படி டெல்லி காவல்துறைக்கு தவெக சார்பில் இ மெயில் அனுப்பப்பட்டுள்ளது. விஜய்யை பார்க்க கூட்டம் கூடி அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தகுந்த ஏற்பாடுகளை செய்யும்படி டெல்லி போலீசிடம் தவெக கேட்டுக் கொண்டுள்ளது.
விஜய்யிடம் 2 நாள் விசாரணையா?
கரூர் கூட்டத்துக்கு தாமதாமாக வந்தது? கூட்டத்தை ஒருங்கிணைத்தது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை விஜய்யிடம் கேட்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விஜய்யிடம் எத்தனை மணி நேரம் விசாரணை நடைபெறும் என்பது தெரியவில்லை. ஆனால் பல மணி நேரம் விசாரணை இருக்கலாம் எனவும் நாளை மட்டுமின்றி நாளை மறுநாளும் சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

