முன்கூட்டியே நடக்கும் த.வெ.க. மாநாடு! தளபதி விஜய் அதிரடி அறிவிப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 25ல் இருந்து ஆகஸ்ட் 21க்கு மாற்றப்பட்டுள்ளது. காவல் துறையின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

த.வெ.க. 2வது மாநில மாநாடு
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாநாட்டு தேதி மாற்றப்பட்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடைபெறும் என கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்திய தமிழக வெற்றிக் கழகம், தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டிருந்தது. இதற்காக மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை, பாரபத்தி பகுதியில் மாநாட்டிற்கான பூமி பூஜையும் நடைபெற்றது. மாநாட்டுக்கு அனுமதி கோரி கட்சி நிர்வாகிகள், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்தை சந்தித்து மனு அளித்தனர்.
மாநாட்டு தேதி மாற்றம்
அப்போது, மாநாடு நடைபெறும் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு அடுத்த ஒருசில நாட்களில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால், காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், மாநாட்டு தேதியை மாற்றி அமைக்குமாறு காவல் துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து கட்சியின் தலைமைக்கு தெரிவித்து முடிவெடுப்பதாக புஸ்ஸி ஆனந்த் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாநாட்டு தேதியை மாற்றி அமைத்து, ஆகஸ்ட் 21-ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
கூடுதல் உற்சாகத்தோடு நடைபெறும்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவல் துறையின் கோரிக்கையை ஏற்று, மாநாடு ஆகஸ்ட் 21-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு மதுரையில் நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த மாநாடு அதே பிரம்மாண்டத்தோடும் கூடுதல் உற்சாகத்தோடும் நடைபெறும் என்றும், நிர்வாகிகள் பாதுகாப்போடு கலந்துகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே மாநாடு நடைபெற உள்ளதால், மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களிலும் புதிய தேதி குறித்த அறிவிப்புகள் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.