அலட்சியப்படுத்தும் பாஜக: தவெக.வுடன் கைகோர்க்கும் OPS? இன்று முக்கிய முடிவு
பாஜக கூட்டணியில் முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் நிலையில், ஆலோசனை முடிவில் முக்கிய முடிவை அறிவிக்க வாய்ப்பு என தகவல்.

முட்டுக்கட்டை போட்ட எடப்பாடி
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுக.வில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெற்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். ஆனால் தாம் பாஜக கூட்டணியில் அங்கம் வகிப்பதாக தெரிவித்தார். இதே போன்று பாஜக தலைவர்களும் எங்கள் கூட்டணி தொடர்வதாக தெரிவித்தனர்.
ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதிமுக, பாஜக இடையே கூட்டணி ஏற்பட்ட நிலையில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணியில் நீடிப்பதை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.
பன்னீர்செல்வத்தை புறக்கணித்த பாஜக
இந்நிலையில் அண்மையில் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பதைத் தவிர்த்தார். இது தொடர்பாக பன்னீர்செல்வம் உடனடியாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனைத்தொடர்ந்து அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடியும் பன்னீர்செல்வத்தை சந்திப்பதைத் தவிர்த்தார். மாறாக கூட்டணியில் உள்ள எடப்பாடி பழனிசாமி, ஜிகே வாசன், ஏசிஎஸ் சண்முகம் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஓபிஎஸ் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
பாஜக.வுக்கு எதிராக களம் இறங்கிய ஓபிஎஸ்
இதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுவிக்காததற்கு கண்டனம் தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.
தவெக உடன் கூட்டணி அமைக்கும் OPS?
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் தவெக தலைவர் விஜய் உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் வெளிப்படையாக கருத்து தெரிவித்த நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்திலும் இது தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கூட்டத்தின் முடிவில் தவெக உடன் கூட்டணி வைப்பது தொடர்பான அறிவிப்பை பன்னீர்செல்வம் வெளியிடுவார் என்று சொல்லப்படுகிறது.