- Home
- Tamil Nadu News
- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.! இதை செய்தால் மட்டுமே PM கிசான் ரூ.6,000.. ஆட்சியர் அதிரடி
விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.! இதை செய்தால் மட்டுமே PM கிசான் ரூ.6,000.. ஆட்சியர் அதிரடி
Farmers: மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் PM KISAN திட்டத்தின் கீழ் நிதி உதவியை தொடர்ந்து பெற, 'வேளாண் அடுக்ககம்' (Agri Stack) திட்டத்தில் பதிவு செய்வது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் முக்கியமான விவசாய நலத்திட்டங்களில் ஒன்றான பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM KISAN) தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு நிதி ஆதரவை வழங்குகிறது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவியை வழங்கி வருகிறது. இந்த தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் மூன்று தவணைகளாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்களான பட்டா, சிட்டா மற்றும் பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு அலைச்சல் மற்றும் திட்டப்பலன்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும் அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்ககம் திட்டம் (Agri Stack) செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு 'தனித்துவ அடையாள எண்' (Unique ID) வழங்கப்படும். இதன் மூலம் வருங்காலத்தில் விவசாயிகள் எந்த ஒரு ஆவணத்தையும் மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
ஆனால் இதுநாள்வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 22,781 பட்டாதாரர்கள் மட்டுமே இத்திட்டத்தில் தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர். இன்னும் 30 சதவீத விவசாயிகள் இன்னும் வேளாண் அடுக்ககம் திட்டத்தில் இணையாமல் உள்ளனர். ஆகவே பதிவு செய்யாத விவசாயிகள் தங்களது நில உடைமை ஆவண விவரங்கள், ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணிணி சிட்டா, பட்டா கைபேசி எண் ஆகிய விவரங்களுடன் தங்கள் கிராமத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கள் அலுவலர்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்களது நில உடைமை ஆவண விவரங்களை விடுபாடின்றி வேளாண் அடுக்ககம் திட்டத்தில் இணைக்கும் பணியினை உடன் முடித்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவசாயிகள் பொது சேவை மையங்களிலும், (CSCs) சென்று தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகளின் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்ட பின்னர் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும். மேற்படி திட்டத்தில் இணைந்தால் மட்டுமே பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ நிதித் திட்டத்தின் (PMKISAN) கீழ் நிதி உதவி பெறும் விவசாயிகள் தடையின்றி திட்டப்பயன்களை தொடர்ந்து பெற முடியும். அடுத்த தவணை தொகை இதில் இணைந்து பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
2025-26 -ஆம் நிதி ஆண்டு முதல் பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ நிதித் திட்டம் (PMKISAN) பிரதம மந்தரி பயிர்க் காப்பீடுத் திட்டம் (PMFBY) போன்ற ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம் என்பதால் விவசாயிகள் தங்களது கிராமங்களில் ஊராட்சி மன்ற அலுவலகம் (அ) கிராம நிர்வாக அலுவலகங்களில் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மற்றும் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார் அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணிணி சிட்டா, பட்டா, கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ நிதித் திட்டத்தின் (PM-KISAN) கீழ் வழங்கப்படும் ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவியைத் தடையின்றிப் பெற 'வேளாண் அடுக்ககம்' பதிவு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

