ஆசிரியர் பணிக்கான தேர்வை ஒத்தி வையுங்கள்.! தமிழக அரசுக்கு சென்ற முக்கிய அறிக்கை
புதிய பாடத்திட்ட மாற்றங்களால் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே தேர்வு தேதியை மாற்றி வைக்க அரசுக்கு கோரிக்கை வலுத்துளளது.

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்விற்கான பாடத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால்,
அத்தேர்வை தாங்கள் எதிர்கொள்வதற்கு தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகத் கூறி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தேர்வுக்கான தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உயர்நீதிமன்றமும் அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டித் தேர்வை ஒத்திவைப்பது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் பல முறை கடிதம் எழுதியுள்ளது. பாமக தலைவர் அன்புமணியும் ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை நடத்தி முடிப்பதில் அவசரம் காட்டுவது ஏன் ? என கேள்வி எழுப்பியுள்ளார். புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப தேர்வர்கள் தயாராகும் வகையில் தேர்வைத் தள்ளிவைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வர வேண்டும்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற தேர்வர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்க மறுத்து, அக்டோபர் 12 ஆம் தேதி திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் எனத் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில் தேர்வுத் தேதியைத் தள்ளிவைப்பது தொடர்பாகப் பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், திட்டமிட்டபடி தேர்வை நடத்தியே தீருவோம் எனப் பிடிவாதம் பிடிக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டிருக்கும் நிலையில், தேர்வுக்கு தங்களை முழுமையாக தயார்ப்படுத்திக் கொள்ளும் வகையில் கூடுதல் கால அவகாசம் வழங்கிய பின்னர் தேர்வை நடத்த வேண்டும் எனத் தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே, தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை ஒத்திவைப்பதோடு, புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப தேர்வர்கள் தயாரான பின்னர் தேர்வை நடத்த வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.