அமமுக யாருடன் கூட்டணி?.. மதில் மேல் பூனையாக டிடிவி தினகரன்.. முக்கிய அறிவிப்பு!
இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய மாட்டேன் என டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறி வந்தார். தவெகவுடன் கூட்டணி என பல இடங்களில் மறைமுகமாக உணர்த்தினார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி நிலையில், திமுகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற அதிமுக, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரனை கூட்டணிக்குள் கொண்டு வர அமித்ஷா முயற்சி எடுத்து வருகிறார். இது தொடர்பாக அவர் டிடிவியிடம் டெல்லியில் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார்.
மீண்டும் பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன்?
அதே வேளையில் டிடிவியை கூட்டணியில் சேர்க்க எடப்பாடியும் சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியானது. இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய மாட்டேன் என டிடிவி திட்டவட்டமாக கூறி வந்தார்.
தவெகவுடன் கூட்டணி என பல இடங்களில் மறைமுகமாக உணர்த்தினார். இப்படி இருக்கும்போது டிடிவி எப்படி மீண்டும் அதிமுக கூட்டணியில் சேருவார் என்ற கேள்வியும் எழுந்தது.
ஊடகங்களில் வெளியான செய்தி தவறு
இந்த நிலையில், அமமுக கூட்டணி தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை என்றும் டிடிவி தினகரன் விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பார் என்றும் அமமுக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் 'கடந்த 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணி விவகாரத்தில் தமிழகத்தின் நலன் மற்றும் கழகத்தின் நலனை மையமாகக் கொண்டே கூட்டணி அறிவிக்கப்படும் என்பதை டிடிவி தினகரன் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி விவகாரத்தில் தயக்கம், குழப்பம்
அந்தச் செய்தி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. இந்தச் சூழலில் சில ஊடகங்கள், கூட்டணி விவகாரத்தில் தயக்கம், குழப்பம், அழுத்தம் என பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதோடு, கடந்த சில தினங்களாக நிகழ்ச்சிகளில் டிடிவி தினகரன் கலந்துகொள்ளவில்லை எனவும் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.
விரைவில் கூட்டணி அறிவிப்பு
கழக பொதுக்குழு நிகழ்ச்சிக்குப் பின்பாக சொந்த வேலைகள் காரணமாகவும், பொங்கல் பண்டிகை நாட்கள் வருவதாலும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்படவில்லை. அதே நோத்தில், கூட்டணி தொடர்பாக டிடிவி தினகரனுக்கு எந்தவொரு நயக்கமும், குழப்பமும், அழுத்தமும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, உரிய நேரத்தில் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டினை அறிவிப்பார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். வரும் 17ம் தேதி டிடிவி தினகரன் தொண்டர்கள், நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்' என கூறப்பட்டுள்ளது.

