பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே தமிழக வெற்றி கழகக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இணைவார்கள் என அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துரையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக வெற்றி கழகத்தைப் பார்த்து பல இயக்கங்களும், பல கட்சி தலைவர்களும் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தவெக மொழி மற்றும் மதங்களுக்கு அப்பாற்பட்டது. நமது பயணம் எளிய மக்களை வாழ வைப்பது, சமநிலையை உருவாக்குவது என்பதை நோக்கி தான் இருக்கிறது.

2026ல் தவெக தலைவர் விஜய் ஆட்சியில் அமர்வார். இதனை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பல்வேறு கட்சிகளில் இருந்து முக்கிய நபர்கள் பலரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளார்கள் என்று தெரிவித்தார்.

அப்போது ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தவெக கூட்டணியில் இணைவார்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே எதிர்பார்க்கலாம் என தெரிவித்தார்.

இதனிடையே அமமுக பொதுச் செயலாளர் கூட்டணி முடிவாவதற்கு முன்பாகவே ஆண்டிப்பட்டி தொகுதியில் தாமே போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டார். ஆண்டிப்பட்டியை அமமுகவுக்கு கூட்டணி ஒதுக்கவில்லை என்றால் தனித்து போட்டியிடத் தயாராக இருப்பதாக தெரிவித்து அதிரடி காட்டினார். அதே போன்று திருச்சி மாவட்டம் முசிறி தொகுதிக்குமான அமமுக வேட்பாளரை தினகரன் அறிவித்துள்ளார்.