இன்றைய TOP 10 செய்திகள்: பீகார் தேர்தல் அறிவிப்பு முதல் தீபாவளி போனஸ் வரை
பீகார் தேர்தல் அறிவுப்பு, 20% தீபாவளி போனஸ், செந்தில் பாலாஜி வழக்கு, மருத்துவத்திற்கான நோபல் பரிசு, இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்த முக்கிய நிகழ்வுகளுடன் இன்றைய TOP 10 செய்திகள்.

பீகார் தேர்தல் தேதிகள் அறிவிப்பு
இந்தியத் தேர்தல் ஆணையம் 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முழுமையான அட்டவணையை வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று, நவம்பர் 14 அன்று வாக்குகள் எண்ணப்படும்.
20% தீபாவளி போனஸ்
தீபாவளி பண்டிகை வருகின்ற 20ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மீண்டும் அமைச்சராக முடியாது
போக்குவரத்து துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்றதாக வழக்கின் தீர்ப்பில் உள்ள கடுமையான கருத்துகளை நீக்க கோரிய செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
"செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை ஏன் டெல்லிக்கு மாற்றக் கூடாது?" என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லிக்கு மாற்றுவதில் எந்தவித ஆட்சேபனை இல்லை என தமிழக அரசு பதிலளித்துள்ளது.
மருத்துவத் துறை நோபல் பரிசு
2025-ஆம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு திங்கட்கிழமை அன்று அறிவிக்கப்பட்டது. நோய் எதிர்ப்புச் சக்தி குறித்த ஆராய்ச்சிக்காக, விஞ்ஞானிகள் மேரி புரூன்கோவ் (Mary Brunkow), ஃப்ரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell), மற்றும் ஷிமோன் சாககுச்சி (Shimon Sakaguchi) ஆகிய மூவருக்கும் இந்த உயரிய விருது பகிர்ந்தளிக்கப்படுவதாக, விருது வழங்கும் அமைப்பான கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் (Karolinska Institute) அறிவித்துள்ளது.
தேடி வந்து கடித்த தெருநாய்!
கேரளாவில் தெருநாய் கடி குறித்த விழிப்புணர்வு நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த நாடகக் கலைஞரை, நிஜமாகவே தெருநாய் ஒன்று கடித்தது. இதை நாடகத்தின் ஒரு பகுதி என நினைத்த கிராம மக்கள் கைதட்டி ரசித்தனர். நாடகம் முடிந்த பிறகே உண்மை தெரியவந்தது.
கோபமடையச் செய்த செயல்!
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நீதிமன்றத்தில் வைத்து ஒரு வழக்கறிஞர் ஷூ வீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தச் செயலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைத் தாக்க முயன்ற செயல், ஒவ்வொரு இந்தியரையும் கோபமடையச் செய்துள்ளது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்க செயல். கடுமையான சூழ்நிலையைச் சந்தித்தும் நீதிபதி கவாய் அவர்கள் காட்டிய அமைதியை நான் மிகவும் பாராட்டுகிறேன். நீதிபதி கவாய் அமைதி காத்தது, நீதியின் விழுமியங்களையும், நமது அரசியலமைப்பின் உணர்வையும் வலுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்" என்றார்.
திமுகவின் இரட்டை வேடம்
கிட்னி முறைகேடு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் விசாரணையை தொடங்காதது ஏன்? என்று திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதே வேளையில் கரூரில் விசாரணையில் வேகம் காட்டுவாதாக அவர் கூறியுள்ளார்.
அசத்தலான திட்டத்தை தொடங்கிய முதல்வர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.4,000-லிருந்து ரூ.5,000 ஆகவும், குடும்ப ஓய்வூதியத்தை ரூ.2,500 ஆகவும் உயர்த்தி அறிவித்துள்ளார். முதல்வரே 12 நபர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதிற்கான காசோலைகளை வழங்கினார்.
இஸ்ரேல் - ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்கும் டிரம்ப்!
காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸுடன் மிகவும் நேர்மறையான விவாதங்கள் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கியமான பேச்சுவார்த்தைக் குழுக்கள் எகிப்தில் கூடவிருக்கும் நிலையில், டிரம்ப் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
டாஸ்மாக்கும், தவெகவும் ஒண்ணுதான்
தமிழ்நாட்டில் ஒரு பக்கம் குடிடதது சாகிறான், மற்றொரு பக்கம் கூத்தாடியை பார்த்து சாகிறான் என டாஸ்மாக்குடன் தவெக தலைவர் விஜயை ஒப்பிட்டு தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாகப் பேசியுள்ளார்.
“பாசிச கட்சி என்று விமர்சித்த விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சிக்கிறது. எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை வழிநடத்தும் தகுதி இபிஎஸ்க்கு இல்லை என்று விமர்சனம் செய்த விஜய்க்கு அதிமுகவும் ஆதரவு கொடுக்கிறது. ஒருவேளை விஜய் கூட்டணிக்கு வரவில்லை என்றால் இவர்கள் பேசியதை திரும்பப் பெறுவார்களா?” என்றார்.