இன்றைய TOP 10 செய்திகள்: நாய்களுக்கு மைக்ரோ சிப், சென்னை ஐஐடிக்கு முதலிடம்!
சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்துவது கட்டாயம், நேருவின் டெல்லி பங்களா ₹1,100 கோடிக்கு விற்பனை, இலங்கைத் தமிழர்களுக்கு சட்டச் சலுகை, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகம் உள்ளிட்ட பல முக்கிய செய்திகள் இன்றைய TOP 10 தொகுப்பில்…

நாய் வளர்ப்பவர்களுக்கு ஆப்பு!
ன்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என்று மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த வேண்டும். மேலும் வளர்ப்பு நாய்களை வெளியே அழைத்து செல்லும்போது நாய்களன் வாயை மூடியிருக்க வேண்டும். இதை செயல்படுத்த தவறினால் நாய் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீண்டும் நம்பர் 1 சென்னை ஐ.ஐ.டி!
மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2024-ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு முதல் இந்தத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தப் பிரிவில், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி) தொடர்ந்து 7-வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் இந்தப் பட்டியலில் முதன்மை இடத்தில் இருந்து வருகிறது. இதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் பெங்களூரு ஐ.ஐ.எஸ். நிறுவனம் முதலிடத்தைப் பிடித்திருந்தது. தற்போது, அது சென்னை ஐ.ஐ.டி.க்கு அடுத்த இடத்தில் உள்ளது.
நேருவின் முதல் பங்களா விற்பனை
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் டெல்லியில் உள்ள பங்களா, ₹1,100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. 3.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சொத்தின் புதிய உரிமையாளர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த பங்களா ஆரம்பத்தில் ₹1,400 கோடிக்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 20% விலை குறைப்புக்குக் காரணம் என்ன என்று எந்தத் தகவலும் இல்லை.
இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம்
இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழ் அகதிகளுக்குப் பயண ஆவணங்கள் இல்லாவிட்டாலும் சட்ட நடவடிக்கை இல்லை என மத்திய அரசு அறிவிப்பு. 2015 ஜனவரி 9க்கு முன் வந்தவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும்.
இதன் மூலம், அரசிடம் பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதப்பட மாட்டார்கள்.
குஷியில் எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. மேலும் எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்த உரிமை நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்துள்ளது.
ப. சிதம்பரத்தின் கிண்டல்
ஜிஎஸ்டி மாற்றங்களை வரவேற்ற காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம், 8 ஆண்டுகளுக்கு முன்பே தவறுகளை சுட்டிக்காட்டியதாகவும், மக்களை கசக்கிப் பிழிந்த அரசு இப்போது மனம் திருந்தி வரி விகிதங்களைக் குறைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
தீபாவளிக்கு முன்பாகவே மோடி அரசு மக்களுக்குப் பரிசுகளை அறிவித்து வருகிறது. ஏற்கனவே ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைத்து நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. விரைவில் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் வரவுள்ளது. ஏற்கனவே நாட்டில் சில வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், அவை அனைத்தும் இருக்கை வசதி கொண்டவை. இன்னும் ஸ்லீப்பர் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படவில்லை. தற்போது முதல் முறையாக அதிவேக, சொகுசு, உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வரவுள்ளது.
மோடி ஒரு சர்வாதிகாரி
காலிஸ்தான் ஆதரவாளரான ஆஸ்திரிய அரசியல்வாதி குந்தர் ஃபெஹ்லிங்கர், சுதந்திரத்திற்கு முன்பு இருந்ததைப்போல இந்தியாவை துண்டு துண்டாக கிழிக்க வேண்டும். பல துண்டுகளாக உடைக்க வேண்டும் என்று பேசியுள்ளார். சமூக ஊடக தளமான எக்ஸ்தளத்தில் காலிஸ்தான் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் ஃபெஹ்லிங்கர் பங்கேற்றார். அப்போது ஃபெல்லிங்கர், காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்தியாவை எப்படி பிரித்து ஒரு தனி நாட்டை உருவாக்குவது குறித்துப் பேசினார்.
போரை நிறுத்தவே 50% வரி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம், தனது வர்த்தக வரிகள் (Tariffs) சட்டவிரோதமானது என அறிவித்த பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகம் தனது மனுவில், இந்த வர்த்தக வரிகள், "உக்ரைனில் அமைதி ஏற்படுத்துவதற்கான ஒரு முக்கிய அம்சம்" என்று வாதிட்டுள்ளது. "உக்ரைனில் நிலவும் போர் தொடர்பான தேசிய அவசரநிலையை சமாளிக்க, இந்தியா ரஷ்ய எரிபொருள் பொருட்களை வாங்குவதற்கு எதிராக அதிபர் IEEPA சட்டத்தின் கீழ் வரிகளை விதித்துள்ளார். இது போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியின் ஒரு முக்கிய அம்சமாகும்," என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.
கால்பந்து ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (செப்டம்பர் 4) முதல் தொடங்குகிறது. குரூப் ஸ்டேஜ் டிக்கெட்டுகளின் ஆரம்ப விலை ₹5,280 முதல் உள்ளது. 48 அணிகள் பங்கேற்கும் புதிய வடிவமைப்பில் இந்த உலகக் கோப்பை நடைபெறும்.