- Home
- Tamil Nadu News
- இன்றைய TOP 10 செய்திகள்: ட்விஸ்ட் வைத்த செங்கோட்டையன்.. H-1B விசா விதிகள் மாற்றம்!
இன்றைய TOP 10 செய்திகள்: ட்விஸ்ட் வைத்த செங்கோட்டையன்.. H-1B விசா விதிகள் மாற்றம்!
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இணைந்த ஓபிஎஸ், டிடிவி தினகரன், புதிய தலைமை நீதிபதி நியமனம், H-1B விசா விதிகளை மாற்றிய அமெரிக்கா, மகளிர் உலகக் கோப்பை பைனலில் இந்தியா உள்ளிட்டவை இன்றைய TOP 10 செய்திகளில் உள்ளன.

இபிஎஸ் மட்டுமே எதிரி!
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை இணைக்கக் கோரிய செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனுடன் பசும்பொன்னில் ஒன்றாக மரியாதை செலுத்தினார். எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்த ஒன்றிணைந்து செயல்படுவோம் என கூட்டாக தெரிவித்தனர்.
செல்லப்பிராணிகளுக்கு லைசென்ஸ்
சென்னை மாநகராட்சி, செல்லப்பிராணி வளர்ப்போருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதமும், பொது இடங்களில் கழுத்து பட்டை இன்றி அழைத்துச் சென்றால் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.
கே.என்.நேருவுக்கு செக் வைத்த ED
நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்த பணி நியமனத் தேர்வில் லஞ்சம் பெற்று 100க்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மோசடி நடைபெற்றது எப்படி என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான ஆவணங்களை தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மோசடி எதுவும் நடைபெறவில்லையென மறுத்திருருந்தார். சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார் எனவும் கூறியிருந்தார்.
இந்தியர்களின் வேலைக்கு ஆபத்து!
டிரம்ப் நிர்வாகம் H-1B விசா கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளதுடன், வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் (EAD) தானியங்கி நீட்டிப்பு முறையையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.
புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்த்
உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி சூர்ய காந்த், இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக (CJI) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் நவம்பர் 24ஆம் தேதி பதவியேற்பார் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
தற்போதைய தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் அவர்களின் பதவிக் காலம் நவம்பர் 23 அன்று முடிவடையும் நிலையில், நீதிபதி சூர்ய காந்த் அவர்கள் நவம்பர் 24 முதல் பொறுப்பேற்பார்.
திமுக அரசை விளாசித் தள்ளிய அண்ணாமலை
தமிழக அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 2.39 லட்சமாக இருக்கையில், தனியார் பள்ளிகளில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக, 5.26 லட்சம் மாணவர்கள் சேர்கின்றனர்.தமிழக பள்ளிக்கல்வித் துறை நிலைமை இப்படி இருக்க, வீண் விளம்பரம் செய்து, தங்களுக்குத் தாங்களே பாராட்டு விழா நடத்தி நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்?'' என்று தெரிவித்துள்ளார்.
வருமான வரி துறைக்கு தண்ணி காட்டிய சச்சின்!
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஒரு காலத்தில் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் தான் ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல, மாறாக ஒரு நடிகர் என்று வாதிட்டு, சுமார் 58 லட்சம் ரூபாய் வரியைச் சேமித்திருக்கிறார் என்ற சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
குழந்தைகளைக் கடத்தியவர் என்கவுண்டர்
மும்பையின் போவாய் (Powai) பகுதியில் உள்ள RA ஸ்டுடியோவில் 17 குழந்தைகள் உட்பட பலரைப் பணயக்கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த நபர் ரோஹித் ஆர்யா வியாழக்கிழமை மாலை மும்பை போலீஸார் சிக்கினார். அப்போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் அவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
33 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா எடுத்த முடிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 33 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நாடு உடனடியாக அணுசக்தி சோதனையை மீண்டும் தொடங்கும் என்று அறிவித்துள்ளார். ரஷ்யா, சீனாவின் ஆதிக்கங்களை எதிர்கொள்ள அமெரிக்கா அணுசக்தி சோதனையை மீண்டும் தொடங்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
சீன அதிபரைச் சந்தித்த பிறகு, பொருத்தமான நேரத்தில் சோதனையை மீண்டும் தொடங்குவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். உலகில் அதிக எண்ணிக்கையிலான அணுசக்தி குண்டுகளை அமெரிக்கா கொண்டுள்ளது என்றும், ரஷ்யா இரண்டாவது இடத்திலும், சீனா மிகவும் பின்தங்கியிருக்கிறது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
பைனல் சென்ற இந்தியா!
மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் 339 ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்த இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. ஜெமீமா சாதனை சதம் விளாசினார்.