இன்றைய TOP 10 செய்திகள்: மிரட்டும் மோன்தா புயல்.. ஆந்திரா பேருந்து விபத்து..
வங்கக்கடலில் உருவாகும் 'மோன்தா' புயல், இந்திய எல்லை அருகில் சீனாவின் கட்டிடம், கர்னூல் பேருந்து விபத்து, மகளிர் உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி உள்ளிட்டவை இன்றைய TOP 10 செய்திகளில் காணலாம்.

சென்னையை குறிவைத்த 'Montha' புயல்
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, 'மோன்தா' புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, வரும் 27ம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமை தொகைக்கு ஒப்புதல்
தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் பெறப்பட்ட 28 லட்சம் புதிய விண்ணப்பங்களில், தகுதியான பயனாளிகளுக்கு டிசம்பர் மாதம் முதல் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?
திபெத்தில் உள்ள பாங்காங் ஏரியின் கிழக்குப் பகுதியில் சீனா புதிய ராணுவ கட்டுமான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுடன் மோதல் ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 110 கி.மீ. தொலைவில் இந்தக் கட்டுமானங்கள் தென்படுகின்றன.
இந்தியா-சீனா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (LAC) அருகில், சீனாவால் கட்டப்பட்டு வரும் இந்த அதிநவீன வான் பாதுகாப்புத் தளம், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
கர்னூல் பேருந்து விபத்து
ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில், உறங்கிக்கொண்டிருந்த 23 பயணிகள் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயங்களுடன் தப்பினர்.
கர்னூல் மாவட்டம் கல்லூர் மண்டலத்தில் உள்ள சின்னடேகூர் அருகே ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, அப்போது ஒரு பைக் பேருந்தின் குறுக்கே வந்துள்ளது. அதன் மீது பேருந்து மோதியதில் பைக் ஓட்டுநர் சாலை ஓரத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அந்த பைக் பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்டது.
இதனால் கடுமையான உராய்வு, தீப்பொறிகள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெட்ரோல் டேங்க் வெடித்துள்ளது. அப்போது பேருந்தின் முன்பகுதி தீப்பிடித்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
112 மருந்துகள் தரத் தேர்வில் தோல்வி
கடந்த செப்டம்பர் மாத மருந்து சோதனையில், 112 மருந்துகள் தரமற்றவை என சுகாதார அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இவற்றில் ஒரு மருந்து போலியானது என்றும், நோயைக் குணப்படுத்தும் மூலப்பொருள் சரியான அளவில் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
ஹோட்டலில் சடலமாகக் கிடந்த டாக்டர்
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த ஒரு பெண் மருத்துவர் (35) நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் தனது உள்ளங்கையில் எழுதியிருந்த கடிதத்தில், கோபால் படானே என்ற காவல் உதவி ஆய்வாளர் (PSI) கடந்த ஐந்து மாதங்களாக தன்னை பாலியல் வன்கொடுமை (Rape) செய்து, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
டிரம்பின் பம்மாத்துக்கு பணிய மாட்டோம்
உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கான முயற்சிகளில் பலன் கிடைக்காத விரக்தியில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்யாவின் இரண்டு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
100 டெர்மினல்களை இறக்கும் எலான் மஸ்க்
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க், இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்க 9 கேட்வே எர்த் ஸ்டேஷன்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. சோதனை ஓட்டத்திற்காக 100 டெர்மினல்களை இறக்குமதி செய்ய மட்டுமே தற்போது அனுமதி பெற்றுள்ளது.
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்
பீகாரைத் தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தொடர்ந்து வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி
இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான முக்கியப் போட்டியில் வெற்றி பெற்று, மகளிர் உலகக் கோப்பை 2025 அரையிறுதிக்கு தகுதி பெற்று வலுவாக மீண்டு வந்துள்ளது. வியாழக்கிழமை, நவி மும்பையில் உள்ள டாக்டர். டி.ஒய். பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில், இந்திய மகளிர் அணி, தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், நியூசிலாந்து அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.