இன்றைய TOP 10 செய்திகள்: தங்கம் விலை உயர்வு முதல் ஆவின் விலை குறைப்பு வரை
ஆவின் பால் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது, தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அண்ணாமலை - டிடிவி தினகரன் சந்திப்பு, விஜய் மீது அவதூறு வழக்கு தொடர ஆலோசிக்கும் தமிழக அரசு உள்ளிட்ட இன்றைய முக்கியச் செய்திகள்.

ஆவின் அசத்தல் அறிவிப்பு!
ஆவின் நிறுவனம் பால் பொருட்களின் விலையை குறைத்து தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது ஒரு லிட்டர் நெய் விலை 690 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக குறைந்துள்ளது. 200 கிராம் பன்னீர் விலை 120 ரூபாயில் இருந்து 110 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 500 கிராம் பன்னீரின் விலை 300 ரூபாயில் இருந்து 275 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் 150 மில்லி UHT பால் விலை 12 ரூபாயில் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக ஆவின் தெரிவித்துள்ளது.
உச்சத்தில் தங்கம் விலை
தங்கம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து, 116,000 ஐ தாண்டியது, வெள்ளியும் அதிக விலை உயர்வை எட்டியுள்ளது. டெல்லியில் தங்கத்தின் விலை திங்கட்கிழமை 10 கிராமுக்கு ₹2,200 அதிகரித்து ₹116,200 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
வடகிழக்கு பயணம் பற்றி மோடி!
பிரதமர் நரேந்திர மோடி, அருணாச்சல பிரதேசத்தில் ரூ. 5,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். தான் பிரதமராக பதவியேற்ற பிறகு 70 முறை வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றிருப்பதாக நரேந்திர மோடி கூறியுள்ளார். பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர்கள் 800 முறைகளுக்கு மேல் வடகிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிடிவி தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
டிடிவி கூட்டணியில் இருந்து வெளியேறியது வருத்தமளிக்கிறது. அவரை மீண்டும் சந்தித்து கூட்டணிக்கு அழைப்பேன் என்று கூறியிருந்த அண்ணாமலை, டிடிவி தினகரனை திடீரென சந்தித்து பேசியுள்ளார். டிடிவியின் வீட்டுக்கே தனது ஆதரவாளர்கள் சிலருடன் நேரடியாக சென்ற அண்ணாமலை சுமார் 2 மணி நேரம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் என்ன பேசினார்கள்? என்பதே இப்போது தமிழக அரசியல் களத்தின் ஹாட் டாபிக்காக உள்ளது.
அரசு பள்ளிக் கட்டடத்திலும் ஊழல்
இந்தியாவில் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு கல்வி, பொருளாதாரம், மருத்துவ கட்டமைப்பு வசதிகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள் அமைந்துள்ளன. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லிதரப்படுகின்றன. இந்நிலையில் திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததற்கு தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சொந்த மக்கள் மீதே ராக்கெட் விடும் பாகிஸ்தான் ராணுவம்
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்வாவில், பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் விமானப்படை, இந்த தாக்குதலின் மூலம் தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாதிகள் மறைந்துள்ள இடங்களை குறிவைத்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விஜய் மீது பாயும் அவதூறு வழக்கு
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். சனிக்கிழமைகள் தோறும் நாள் ஒன்றுக்கு இரண்டு மாவட்டங்கள் வீதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விஜய்யின் பொய் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, விஜய்க்கு எதிராக அவதூறு வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விமான சக்கரத்தில் தொற்றி வந்த சிறுவன்
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன், காபூலில் இருந்து டெல்லி வந்த விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து கொண்டு 94 நிமிடங்கள் பயணம் செய்து உயிர் பிழைத்துள்ளான். இந்தச் சிறுவனின் செயல், விமான நிலைய பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை
பிரிட்டன், கனடா, மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்ததற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜோர்டான் நதிக்கு மேற்கே பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
கால்பந்திலும் பாகிஸ்தானை ஊதித் தள்ளிய இந்திய அணி!
சாஃப் U-17 சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி குரூப் 'பி'-யில் முதலிடத்தைப் பிடித்தது. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தாலும், முதலிடத்திற்கான போட்டி விறுவிறுப்பாக அமைந்தது.