- Home
- Tamil Nadu News
- இன்றைய TOP 10 செய்திகள்: சஸ்பென்ஸ் வைத்த செங்கோட்டையன்... மீண்டும் வரும் முகக்கவசம்...
இன்றைய TOP 10 செய்திகள்: சஸ்பென்ஸ் வைத்த செங்கோட்டையன்... மீண்டும் வரும் முகக்கவசம்...
தமிழக அரசியலில் பல்வேறு பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. செங்கோட்டையனின் அதிருப்தி, விஜய்யின் கச்சத்தீவு கருத்து, மோடி தாயார் குறித்த அவதூறு என பல விஷயங்கள் இன்றைய TOP 10 தொகுப்பில்…

மோடியின் வேதனை
பிகாரில் காங்கிரஸ் - ராஸ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு எதிராகவும், வாக்கு திருட்டு என்ற பெயரிலும் மாபெரும் பேரணி நடைபெற்றது. அப்போது நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ஒருசில கருத்துகள் தெரிவிக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
மகளை கட்சியில் இருந்து நீக்கிய ராவ்
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, பிஆர்எஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி செயல்பட்டதாக கூறி கவிதாவை பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும் கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிக்கையானது பிஆர்எஸ் பொதுச் செயலாளர் டி. ரவீந்தர் ராவ் மற்றும் கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழு பொறுப்பாளர் சோமா பாரத் குமார் பெயரில் வெளியாகியுள்ளது. பிஆர்எஸ்ஸில் இருந்து நீக்கம் செய்யப்ப கவிதா விரைவில் பத்திரிகையாளரை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
364 வாக்குறுதிகளை நிறைவேற்றிட்டோம்
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 364 நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், முழுமையாக நிறைவேற்றப்பட்டவை 66 மட்டுமே என்று கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,400-ஐத் தாண்டியுள்ளதாக தாலிபன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் செவ்வாய்க்கிழமை அன்று எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்தார். இந்த நிலநடுக்கத்தில் 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
எலிகள் கடித்து குதறி பச்சிளம் குழந்தைகள் படுகாயம்!
மத்தியப் பிரதேசம் இந்தூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாராஜா யஷ்வந்தராவ் சிக்சாலயா (MYH) என்ற மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த வாரம் பிறந்த இரண்டு குழந்தைகள், பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
டி20 க்கு குட்பை சொன்ன ஸ்டார்க்
2025 ஆம் ஆண்டில், விராட் கோலி, ரோஹித் சர்மா, க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2012 ஆம் ஆண்டில் டி20 சர்வதேச போட்டிகளில் அறிமுகமான அவர், 13 ஆண்டு கால வாழ்க்கையில் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பொது இடங்களில் மீண்டும் முகக்கவசம்
தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும், மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை பணிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மாஸ்க் எனப்படும் முகக்கவசம் அணிய சுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மாதந்தோறும் மின்கட்டணம்
தமிழ்நாட்டில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி ஆண்டுதோறும் மின் கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக வீட்டு பயன்பாடுக்கு 2024 ஜூலை மாதம் 4.8 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. கடன், உற்பத்தி தேவை உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு நிகழாண்டு 3 சதவீதம் முதல் 3.16 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்த போவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாயின.
இதனால் மீண்டும் மின் கட்டணம் உயருமா? என பொதுமக்கள் அச்சத்தில் இருந்த நிலையில், 'இது தொடர்பாக போலி செய்திகள் உலா வருகின்றன. மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை' என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செங்கோட்டையன் சஸ்பென்ஸ்
முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான செங்கோட்டையன் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடந்த சில மாதங்களாவே அதிருப்தியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற 5ம் தேதி மனம் திறந்து பேசப்போகிறேன். அது வரை அனைவரும் பொறுமையாக இருக்குமாறு செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு இலங்கை அதிபர் பதில்
சமீபத்தில் மதுரையில் மாநாட்டை நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கு, கச்சத்தீவை மீட்பதே ஒரே தீர்வு. அதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். விஜய்யின் இந்த பேச்சுக்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹேரத் கண்டனம் தெரிவித்தார்.
இலங்கை அதிபர் கச்சத்தீவு எங்களுடைய பூமி, அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. இலங்கை மக்கள் நலனுக்காக, கச்சத்தீவைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.