டெல்லியில் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் செய்வதை கணவர் எதிர்த்ததால் ஏற்பட்ட சண்டையில் மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலைக்கு முயன்றார். காவல்துறை அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சமூக வலைதளங்களில் அதிகம் ரீல்ஸ் செய்து வந்த மனைவியுடன் ஏற்பட்ட தொடர் சண்டையின் காரணமாக, கணவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் டெல்லி நஜஃப்கர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் - மனைவி சண்டை
நஜஃப்கரில் உள்ள பழைய ரோஷன்புராவில், இ-ரிக்ஷா ஓட்டுநரான அமன் (35) என்பவர் தனது மனைவி, இரண்டு மகன்களுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அமனின் மனைவி, சமூக வலைதளங்களில் "ரீல்ஸ் ஆர்ட்டிஸ்ட்" என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, சுமார் 6,000 பின்தொடர்பவர்களை வைத்திருந்தார்.
மனைவி சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதைக் கணவர் அமன் எதிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.23 மணியளவில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், அமன் தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
மீட்க வந்த காவல்துறை
மனைவியைக் கொலை செய்த பின்னர், அமன் தூக்கிட்டுத் தற்கொலைக்கும், விஷம் அருந்தியும் தற்கொலைக்கும் முயன்றார். அப்போது, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை குழுவினர் அவரை மீட்டனர். உடனடியாக அருகில் உள்ள ஆர்.டி.ஆர்.எம். மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் காவல்துறையின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், கொலை உள்ளிட்ட தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், அண்டை வீட்டார் மற்றும் உறவினர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
