உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண், தனது காதலனுடன் பத்து முறை ஓடிப் போன நிலையில், கிராம பஞ்சாயத்தில் விநோதமான கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். மாதத்தில் 15 நாட்கள் காதலனுடன், மீதமுள்ள 15 நாட்கள் கணவருடன் வாழ விரும்புவதாகக் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் கணவருடன் வாழ்ந்து வந்த ஒரு பெண், தனது காதலனுடன் பத்து முறை ஓடிப் போன நிலையில், கிராம பஞ்சாயத்தில் விநோதமான கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். 'மாதத்தில் 15 நாட்கள் காதலனுடன் வாழ்வேன், மீதமுள்ள 15 நாட்கள் கணவருடன் வாழ்வேன்' என்று அவர் வைத்த கோரிக்கை, பஞ்சாயத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

திருமணமான ஒன்றரை ஆண்டில்...

அந்தப் பெண்ணுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்களிலேயே, அவர் ராம்பூரில் உள்ள டாந்தா பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் அவர் தனது காதலனுடன் பத்து முறை ஓடிப் போனதாகக் கூறப்படுகிறது.

கணவர் கொடுத்த புகார்

முதல் முறை ஓடிப் போனபோது, கிராம பஞ்சாயத்தார் அழுத்தம் கொடுத்ததால், கணவர் அவரை அழைத்து வந்துள்ளார். ஆனால், அதன்பிறகு ஒன்பது முறையும் அவர் காதலனுடன் ஓடிப் போயுள்ளார். எட்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் ஓடிப் போனபோது, கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும், தன் மனைவி மீது எந்த வழக்கும் வேண்டாம், அவரை மட்டும் மீட்டுத் தாருங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பஞ்சாயத்துக்கு வந்த பிரச்சினை

காவல்துறையினர் அந்தப் பெண்ணை மீட்டு கணவரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், அடுத்த நாளே அவர் வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் காதலனுடன் சென்றுள்ளார். இதனால், கிராம பஞ்சாயத்தில் இந்தப் பிரச்சனை பேசப்பட்டுள்ளது. அங்கேயும் அந்தப் பெண் தன் காதலனுடன் மட்டுமே வாழ்வேன் என்று கூறியுள்ளார். பலமுறை அவரை சமாதானப்படுத்த முயன்றும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

மனைவியை காதலனுடன் அனுப்பி வைத்த இளைஞர்

அப்போதுதான், அவர் இந்த விநோத கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதைக் கேட்ட பஞ்சாயத்தார் திகைத்துப் போனார்கள். அந்தக் கோரிக்கையைக் கேட்ட கணவர், கைகளை கூப்பி, "என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் உங்கள் காதலனுடன் சென்று வாழுங்கள்" என்று கூறி, அவரை காதலனுடன் செல்ல அனுமதித்தார்.