ஆந்திராவில் புச்சுபல்லே குல திருமணங்களில், மணமகனை மூன்று முறை கருப்பு சாட்டையால் அடிப்பது ஒரு விநோத சடங்காக பின்பற்றப்படுகிறது. கங்கம்மா தெய்வத்தின் கனவு உத்தரவின்படி இந்த சடங்கு நூற்றாண்டுகளாக நடைபெற்று வருவதாக நம்பப்படுகிறது.
ஆந்திர மாநிலம், ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தில் உள்ள புச்சுபல்லே குலத்தைச் சேர்ந்த திருமணங்களில், ஒரு விநோதமான சடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இங்கு, மணமகனை மூன்று முறை கருப்பு சாட்டையால் அடித்தால் மட்டுமே திருமணம் முழுமையானதாகக் கருதப்படுகிறது.
மணமகன், மணமகளின் கழுத்தில் தாலி கட்டியவுடன், மணமகனின் குடும்ப உறுப்பினர்கள் அவரை இந்தச் சடங்கின்படி கருப்பு சாட்டையால் அடிக்கிறார்கள்.
கங்கம்மா கோவிலில் நடந்த சம்பவம்
இந்தச் சடங்கு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகக் கூறப்படுகிறது. புச்சுபல்லே குலத்தைச் சேர்ந்தவர்கள் கங்கம்மா கோவிலில் இருந்த ஒரு பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதில் ஐந்து கருப்பு சாட்டைகளைக் கண்டனர். உடனே, அவர்கள் தவறுதலாக நடந்து கொண்டதாகக் கருதி கோவிலுக்குச் சென்று தெய்வத்திடம் மன்னிப்பு கேட்டனர்.
அன்றிரவு, அவர்களின் கனவில் தோன்றிய கங்கம்மா தெய்வம், "உங்கள் குலத்தின் திருமணத்தின்போது மணமகனை கருப்பு சாட்டையால் மூன்று முறை அடிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டதாக நம்பப்படுகிறது. அன்றிலிருந்து, இந்த விநோத சடங்கு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
புச்சுபல்லே குடும்பத்தில் சாட்டியடி சடங்கு
இப்பகுதியில் உள்ள பத்ரம்பள்ளி, தொண்டூர், இனங்களூர், லோமட புச்சி பள்ளே, போடிவாரி பள்ளே, மல்லேலா, அகதூர் மற்றும் சந்த கோவூர் போன்ற கிராமங்களில், புச்சுபல்லே குலத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த விநோதமான திருமணச் சடங்கு இன்றும் தொடர்ந்து வருகிறது.
சமீபத்தில், ஒரு திருமணத்தில் மணமகனை சாட்டையால் அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி, வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சடங்கு, இணைய பயனர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
